படிக்க வைக்கின்றதா பறிக்க நினைக்கின்றதா – பொருளாதார சிக்கலில் பெற்றோர்கள், மன அழுத்தத்தில் மாணவர்கள்
படிக்க வைக்கின்றதா… பறிக்க நினைக்கின்றதா…
பெருந்தொற்றுக் காலத்தில் சிக்கல்களைச் சந்திக்காதவர் எவருமில்லை. பணச் சிக்கல்களை மட்டும் அல்ல; மனச் சிக்கல்களையும் ஏற்படுத்திவிட்டது கொரோனா. தொற்று ஏற்படாதவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பதட்டம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து வரும் மரண செய்திகள் ஏற்படுத்தும் அச்சம் என அனைவரின் மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளது. சிறுவர்களும், இளைஞர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் நோய் மீதான பயத்தால் 22 சதவீத குழந்தைகளும், பதற்றத்தால் 41 சதவீத குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என, எய்ம்ஸ் ஆய்வில் தெரியவந்து உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புகள், நண்பர்களைச் சந்திக்க முடியாமை, பெற்றோர் வேலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் என்று பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார சிக்கலில் பெற்றோர்கள், மன அழுத்தத்தில் மாணவர்கள்
இதில் மிக முக்கியப் பிரச்சனை, வருவாய் இழப்பு காரணமாகத் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளி, கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுமோ என்ற பெருங்கவலை பெற்றோருக்கு எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தனியார் பள்ளிகளும் ஒன்று என்பதை யாரும் மறுக்கவில்லை. கட்டணம் வசூலிக்க முடியாத சில தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் தங்கள் பள்ளிகளை மூடிவிட்டன. தனியார் பள்ளி நிர்வாகங்களை விட அதில் பணி புரியும் ஆசிரியர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
சில தனியார் பள்ளிகள் பல ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கின்றன. வேலை பார்க்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாகக் குறைத்திருக்கின்றன. இதில் கூட ஏதோ நியாயம் இருக்கின்றது. ஆனால், கட்டணத்தையும் வசூல் செய்துவிட்டு, ஆசிரியர்களின் வேலைப் பளுவையும் அதிகமாக்கிவிட்டு, ஊதியத்தையும் குறைத்த தனியார் பள்ளிகளும் உண்டு.
இதனால் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் ஆசிரியப் பணியை விடுத்து வேறு துறைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அரசு கல்லூரிகளைத் திறக்க உத்தரவிட்டும் இன்னும் மாணவர்களைக் கல்லூரிக்கு வரச் சொல்லாமல், ஆன்லைன் வகுப்பெடுக்கும் தனியார் கல்லூரிகளும் உண்டு. இவர்களும் பேரிடர் காலம் என்பதையும் கருதாமல் முழுக் கட்டணத்தையும் வசூலித்து விட்டு, ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கி வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் சூழ்நிலையில் முழுக் கட்டணத்தையும் வசூலிப்பது மாபெரும் அநீதியாகும். பெருந்தொற்றுக் காரணமாக வருவாயின்றி வாடும் பெற்றோரும், மாணவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். படிப்பை பாதியிலேயே நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
இந்தக் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம் என்று அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. வகுப்புகளையும் தொடங்கிவிட்டன. புதிதாகப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள், எங்கே தங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், எவ்வளவு தொகையை கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறதோ, அவ்வளவையும் கட்டிவிடுகின்றனர். ஏற்கனவே அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே ஓரளவு புகார்களை வெளியில் சொல்கின்றனர். மற்றவர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயத்தால் வாய் திறக்க மறுப்பது தனியார் பள்ளிகளின் நிர்வாகத்திற்கு வசதியாகப் போய்விட்டது.
தனியார் பள்ளிகள் அதிகக் கட்டண வசூல் செய்கின்றன என்பது குறித்துக் கடந்த ஆண்டே பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால், கட்டணம் செலுத்தக் கட்டாயப் படுத்தக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தது பள்ளிக் கல்வித் துறை. இதனை எதிர்த்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது எப்படி? பள்ளியை நடத்துவது எப்படி?, என்பன போன்ற கேள்விகளோடு நீதிமன்றத்திற்கு சென்றனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்குக் கட்டணக் குழு 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் 75% கட்டணத்தை மட்டும் இரு தவணைகளில் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடத்தப்படும்வரை தனியார் பள்ளிகளில் ஆண்டு நிதி, பேருந்து கட்டணம், சீருடை கட்டணம், நூலக-ஆய்வகக் கட்டணங்கள், விளையாட்டு, நுண்கலை கட்டணங்கள், மருத்துவ கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணம் எதையும் வசூலிக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனாலும் இந்த உத்தரவை பல பள்ளிகள் பின்பற்றவில்லை.
இந்த ஆண்டும் நீதிமன்ற உத்தரவைத்தான் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறினாலும், அதற்கு முன்னதாகவே அதிகமான கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிப்பதாகவும், முந்தைய ஆண்டை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கல்விக் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையில்லை என்றும் பல புகார்களை முன் வைக்கின்றனர் பெற்றோர்கள்.
பள்ளிகள் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் அறிவிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தினாலும், பள்ளிகள் அதனைப் பின்பற்றுவதில்லை. ஆகவே அரசு , “கட்டண நிர்ணயக் குழுவை மேம்படுத்தி அதன் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும்; கட்டண நிர்ணயம் செய்யப்படும் போது, தனியார் பள்ளிகளின் நிர்வாகம், பெற்றோர்கள் ஆகியோரிடம் கருத்துக் கேட்புகளுக்குப் பின்பே கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்; பெற்றோர்களின் புகார்கள் விசாரிக்கப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் பள்ளிகளின் மேல் நடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டும்” என்பதே பல பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்குச் சரியான தீர்வு என்னவென்றால், பெற்றோர்களும் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைச் சேர்க்க முன் வர வேண்டும். போலியான கவுரவத்திற்காக அதிக கட்டணமாக இருந்தாலும் சரி, எங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் தான் சேர்ப்போம் என்ற முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில் படித்து, பெரிய பதவிகளில் இருக்கும் சான்றோரை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும். அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. ஆகவே, பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்போம்; அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்திடுவோம்.
முனைவர். சுடர்க்கொடி கண்ணன்
Leave a Reply