சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்களின் தலைமுறைப் பெருமை

Share Button

சுவிட்சர்லாந்து மிகவும் சிறிய அழகிய நாடு. வளங்கள் நிறைந்த வாழ்க்கைத் தரம் உயர்ந்த ஆல்ப்ஸ் மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் கொஞ்சும் நாடு.

இந்த நாட்டின் மொத்த ஜணத் தொகையே ஏறத்தாழ எட்டு மில்லியன் மட்டுமே. 41,285 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தோராயமாக கொண்ட சுவிட்சர்லாந்து, 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும். வடக்கே ஜெர்மனி, மேற்கே பிரான்சு, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டு நான்கு தேசிய மொழிகள் பேசப்படுகிறது.

யேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் உரோமாஞ்சு என்னும் தேசிய மொழிகளே இவை. சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்களின் தலைமுறைப் பெருமை பேசும் முன் யாரிந்த தமிழர்கள் என்ற வரலாறு சற்று அறிய வேண்டியுள்ளது. சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்கள் எனப்படும் தாய்மொழித் தமிழைப் பின்புலமாக கொண்டவர்களில் பெரும்பாலானாவர்கள் ஈழப்பிரச்சனை காரணமாக சுவிட்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்தவர்களாவர்.

1980 & 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் உயிரைத் தக்கவைப்பதற்காக சொந்த நாட்டிலிருந்து சுயம் தாங்கி ஏழைகளாக சுவிட்சர்லாந்துக்குள் வந்து சேர்ந்தனர். இந்த நாடு ஈழத் தமிழர்களை கைகூப்பி வரவேற்றலாலும் ஏதிழைகளாக வந்தவர்கள் இருப்பிடத்தை தக்கவைக்க அரசியல் தஞ்சம் கோரி தத்தலித்தனர். எந்நேரமும் துரத்தியடிக்கப்படலாம் என்ற ஏக்கமும், சொந்த நாட்டினருக்கே ஏன் இந்த கோலமும்? என்ற குமுறல் முதல் தலைமுறையின் அவலமே…!

ஆரம்ப காலங்களில் வதிவிடவிசா மட்டுமல்லாது மாறுபட்ட மொழி, கலை கலாச்சாரப் பண்பாடு, காலநிலை, கட்டடங்கள், கல்விக் கொள்கை, வேலை வாய்ப்பு, நிற வேறுபாடு என்று எண்ணற்ற காரணிகள் இவர்களைத் திண்டாடத்தான் வைத்தன. இன்று சுவிட்சர்லாந்து நாட்டில் புலம் பெயர் தமிழர்கள் ஏறக்குறைய 65000 மக்கள் வாழ்கின்றனர்.

பிறந்த பின் சிறந்தவை மற்ற இனங்கள் -& ஆனால் சிறந்தே பிறந்த இனம் தமிழினம்.
அதற்கேற்ப தமது தனித்துவத்தை, சுயத்தை தொலைக்க கூடாதென ஒவ்வொரு புலம்பெயர் ஈழத்தமிழரும் தமக்குள் சபதம் கொண்டதால் மட்டுமே சுவிட்சர்லாந்து நாட்டில் புலம் பெயர் தமிழரின் தலைமுறைப் பெருமையை பேசவும், எழுதவும் முடிகிறது.

இடத்தை தக்க வைத்துக் கொண்ட புலம்பெயர் தமிழினம் தமது தலைமுறைப் பெருமையை மூன்று விதமாக வளர்த்துக் கொண்டு வருவதாகவே நான் உணர்கிறேன்.

அவையாவன :

1. தமிழ் குடும்பத்துக்கான தலைமுறைப் பெருமை
2. தனிப்பட்ட குடும்பத்துக்கான சிறப்புத் தலைமுறைப் பெருமை
3. தமிழ் இனத்துக்கான தலைமுறைப் பெருமை.

என்பதாகும். முதலில்…
தமிழ் குடும்பத்துக்கான தலைமுறைப் பெருமை:
சுவிட்சர்லாந்து நாடு பல்லினக் கலாச்சார மக்களின் விழுமியங்களை தன்னக்தே கொண்டு சமரச நோக்கில் மனிதம் காத்து மக்கள் கருத்தெடுப்பில் பயணிக்கும் நாடு.
இந்த நாட்டில் புலம் பெயர்ந்து வாழ் தமிழர்கள் தங்களுடைய மொழி மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய விழுமியங்களை தொலைக்காது தமிழராகவே வாழ வேண்டும் என்ற உணர்வு இவர்களுக்குள் குருதியோடு கலந்த ஒன்றாக இருந்து வந்த காரணத்தினால் “தமிழால் வாழும் வீட்டை’’ இவர்கள் கட்டிக்காத்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேறினால் தமது ஆளுமையை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. இதனால் வாழ்வியல் நாட்டு மொழியும், வாழ்வியல் நாட்டுச் சூழலோடு ஓரளவு சாய்ந்து போகும் தன்மையும் அவசியம் என்று உணர்ந்த காரணத்தால் இரண்டு கலாச்சாரத்திலும் உள்ள நல்லதையும் கெட்டதையும் சமநிலையில் உள்வாங்கி வாழக் கற்றுக் கொண்டே வருகின்றனர் எனலாம்.

தமிழரது தமிழ் குடும்பத்துக்கான தலைமுறைப் பெருமையில் முதன்மையானது தமது தாய்மொழி மணம் வீசும் மனையும், மகுடமாக ஓரிடம் பிடிக்கும் இறை வழிபாட்டு இடமும் ஆகும். இன்றும் நிலம் வாங்கி வீடு கட்டி பெருமை கொண்ட போதும் வீட்டினுள் இயல்பைத் தொலைக்காத இனமாகவே பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறையினருக்கு தமது பெற்றோரே முன் மாதிரி.

இதனால் இரண்டாம் தலைமுறையும் தமிழால் வாழும் மனையை சிறப்பிக்கின்றனர்.ஈழத்து உணவின் மணமும் சுவையும், பல்லினக் கலாச்சாரத்தின் உணவும் போட்டி போட்டுக் கொண்டாலும் சோறும், பருப்பும், கீரையும், அப்பளமும் அறியாத இரண்டாம் தலைமுறை இருக்கவே வாய்ப்பில்லை எனலாம்.எத்தனை சட்டங்கள் இந்த நாட்டிலிருந்தாலும் நமது குடும்ப விவகாரம் நாலு சுவருக்குள் என்ற நாகரீகம் காக்கும் இனமென இந்த நாட்டு சமூக ஆய்வாளர்களின் கருத்துக் கணிப்பு சொல்கிறது.

பெற்றோரைத் தலைமை பண்பாக உள்வாங்கி அவர்களின் வழி நடத்தலில் கல்வி, தொழில், திருமணம் என்ற கட்டமைப்புக்குள் இரண்டாம் தலைமுறை வளரவும் வாழவும் பழகி வருகின்றது. உயர்தர நாகரீகம், அளவற்ற ஆடம்பரம், தேவைக்கேற்ப வசதி வாய்ப்பு என்று வாழ்வியல் நாட்டில் பெருகியிருந்தாலும் சிக்கனமும், சேமிப்பும், கடின உழைப்பும், கட்டுக் கோப்பும் பெரும்பாலான குடும்பங்களில் கட்டிக் காக்கப்படுகிறது.

16 வயதில் புகைக்கவும் முடியும், 18 வயதில் மதுவை அருந்தவும் முடியும் என்பது இந்த நாட்டில் இயல்பு நிலை. எம்மவர் பிள்ளைகளுக்கு இவை இன்றும் மரியாதைக் குறைவான நிலையாகவே தமிழால் வாழ்கின்ற மனை உணர்த்தி நிற்கின்றது. இதற்கு காரணம் தமிழால் வாழும் குடும்பத் தலைமுறைப் பெருமையே எனலாம்.

உறவுகளுக்கு உதவுதல், ஊருக்கு உதவுதல் இப்படி உழைக்கும் பணத்தில் பகிர்ந்து கொடுத்து வாழ்வது இவர்களது தலைமுறைப் பெருமையே…! இதற்கு உண்டியல் அனுப்பும் கடைகளும், ஊரில் பெருகி வரும் அறக்கட்டளை மையங்களும் சாட்சியம்.
வீட்டுக்குள் பொங்கல் விழா முதற்கொண்டு ஆடிக் கூழ்வரை காய்ச்சப்படுகிறது. தமிழர்களது பண்பில் ஒன்றான விருந்தோம்பலும் வார விடுமுறைகளில் கலைகட்டுகிறது. தம் இனத்தவர்களை மட்டுமல்லாது வாழ்வியல் சூழலில் பல்லினக் கலாச்சார மக்களில் நண்பர்களை தனதாக்கி கொண்டவர்கள் அவர்களையும் தமிழால் வாழும் வீட்டிற்குள் அழைத்து தமது அறுசுவை உணவுகளை வழங்கி தமது குடும்பத் தலைமுறைப் பெருமையை அடையாளப்படுத்துகின்றனர்.

தமது தமிழர் தலைமுறைப் பெருமை சார்ந்த கலாச்சார நிகழ்வுகளுக்கு குடும்பத்தினர் அனைவரும் தமிழர் தம் பாரம்பரிய உடைகளையே உடுத்துகின்றனர். தோளுக்கு மேல் வளர்ந்த மகனை மதிக்கும் தந்தையும் பருவத்தைத் தொட்டு விட்ட மகளை கண்ணும் கருத்துமாக பராமரிக்கும் மொத்தக் குடும்பமும் இந்த நாட்டின் கலாச்சாரத்துள் கலப்படமாக மாறவில்லை என்பதற்கு சாட்சியங்களாகும். வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் கூட வாழை, துளசி, கறிவேப்பிலை, கற்பூரவள்ளி வேம்பு, புதினா என்று தமிழர் தலைமுறைப் பெருமை சொல்லும் மூலிகைச் செடிகளையும் கொட்டும் பனியில் கூட பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். மேற் சொன்னவை யாவும் சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் மக்களின் தமிழால் வாழும் குடும்பத்துக்கான தலைமுறைப் பெருமையை பேசி நிற்கின்றன.

இரண்டாவதாக…
தனிப்பட்ட குடும்பத்துக்கான சிறப்புத் தலைமுறைப் பெருமை:
இது சற்று மாறுபட்டது, ஆனாலும் இன்று வரை கட்டிக் காக்கப்படும் வாழ்வியல் மரபை உள் வாங்கியது. சுவிட்சர்லாந்து நாட்டில் புலம் பெயர்ந்தாலும் தூக்கிச் செல்லப்பட்ட தனிக்குடும்ப மரபே இது. இங்கு ஒவ்வொருவருடைய பரம்பரை விழுமியங்கள் பின்புலமாக செயலாற்றி வருகிறது. இதற்குள் சாதியம், சமய வழிபாட்டு முறை, சடங்கு சம்பிரதாய முறை, உணவு பழக்க வழக்க முறை என்று எண்ணற்ற காரணிகளை அடக்கிக் கொள்ளலாம்.

சுவிட்சர்லாந்து என்ற வளர்ச்சியடைந்த நாட்டுக்குள் முப்பது வருடங்களைக் கடந்து வாழ்ந்து வருகின்ற புலம் பெயர் தமிழர்கள் “சாதியம்” என்ற சொல்லை தமது இரண்டாம் தலைமுறையின் வாயிலாக இந்த நாட்டிலும் பல்லினக் கலாச்சார மக்களின் எண்ண வலைகளில் தேடல்களாக பதிவாக்கி வருகின்றனர்.
இரண்டாம் தலைமுறை “தமிழர்’’ என்ற அடையாளத்துடன் கல்வி கற்கையில் கல்வி வளாகமானது பல்லினக் கலச்சார மக்களின் கலாச்சார விழுமியங்களை ஓரளவு அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளது. இதனால் தனிக் குடும்பத்துக்கான தலைமுறைப் பெருமைகளில் ஒன்றான சாதியமும் அறிந்த விடயமாகவும் ஆராயும் விடயமாகவும் மாறியுள்ளது. அனேகமான புலம்பெயர் தமிழ் குடும்பங்களில் “எமது சாதி” என்ற தனித்துவ அடையாளம் பேசப்படுகிறது. மற்றும் தமது வளரிளம் தலைமுறைக்குள் கடத்தவும் படுகிறது. முதல் தலைமுறை தமது பிள்ளைகளுக்கு திருமணச் சடங்கை நடத்த முனைகையில் தமது சாதி, தமது சொந்தம், தமது ஊரவர் என்ற போக்கில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அது மட்டுமல்லாது பெண்பிள்ளைகள் வயசுக்கு வந்தால் தமது தனித்துவ குடும்ப மரபை உள்வாங்கி உணவு, சடங்கு முறை என்பவற்றை கடைப்பிடிப்பதும் அதிசயமே.
சமயச் சடங்கில்கூட தமிழர்களின் வீட்டுக்கு வீடு வித்தியாசமான வழிபாட்டு முறைமைகள் பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமன்றி குலதெய்வ வழிபாடு, இறந்தவருக்கான கிரியைகள் என்ற எண்ணற்ற நிகழ்வுகளில் தனிப்பட்ட தமது குடும்பத்துக்கான தலைமுறைப் பெருமையையே பின்பற்றுகின்றனர்.
குடும்பத்துக்கென்ற குலதொழில்கள் கூட வாழ்வியல் நாட்டில் குறிப்பிட்ட பகுதியினரால் மேற்கொள்ளப் படுகிறது. குறிப்பாக பொற்கொல்லர் தொழில், தச்சுத் தொழில், சமையல் தொழில், முடிவெட்டும் தொழில், வணிகத் தொழில் இப்படி பலதரப்பட்ட குலமரபு மாறாத தொழில்கள் சுவிட்சர்லாந்து வாழ் புலம்பெயர் தமிழர்களின் தனிப்பட்ட குடும்பத் தலைமுறை பேசுகின்றன.

இத்தொழிலுக்கு கொடுக்கப்படும் உயர்வும், வருமானமும் இந்த தனிப்பட்ட குடும்ப தலைமுறைப் பெருமையை எடுத்துச் செல்வதில் ஆர்வம் கொடுக்கிறது எனலாம்.

இறுதியாக…
தமிழ் இனத்துக்கான தலைமுறைப் பெருமை:
தமிழ் இனத்துக்கான தலைமுறைப் பெருமை என்பது தனித்துவமான அடையாளம். உயிர்ப்பு தொலைக்காத உணர்வால் நிலைத்து நிற்பது.
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்.
எனும் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையின் வாக்கிற்கமைய இனத்திற்கான தலைமுறைப் பெருமையை கட்டிக்காத்து வருகின்றனர்.

தம்மினத்தை அடையாளப்படுத்தினால் மட்டுமே தமக்கான தலைமுறைப் பெருமையும் இனிவரும் வளரிளம் தலைமுறைக்கான பெருமையும் கொண்டாடப்படும் என்று அறிவார்த்தமாக உணர்ந்ததால் முதலில் தமக்கான இருப்பிடத்தை தக்கவைத்து தமிழால் வாழும் வீட்டை அடையாளப் படுத்தினான் புலம்பெயர் தமிழன்.தமிழினத்தின் முதல் அடையாளமே நிலப்பரப்பில் கட்டடம் எழுப்பி தம்மை குடியிருப்புகளாக முன்னிறுத்துவது. இதனைத் தொடர்ந்து சங்கங்களை அமைத்து தம் இனத்தின் மொழி முதற்கொண்டு தலைமுறை எச்சங்களை சாட்சியப்படுத்தல் குறித்து ஆராயவும் தொடங்கினான்.

இதற்குள் இந்த நாட்டில் தம்மை ஆளுமைப்படுத்த வேண்டுமென்று உணர்ந்த தமிழர்கள் இந்த நாட்டின் வாழ்வியல் மொழிகளை கற்று கடின உழைப்பாளிகளாகவும் நேர்மையானவர்களாகவும் தம்மை முன்னிறுத்தினர். தமது பிள்ளைகளின் கல்விக்கு கொடுக்கும் ஊக்கத்தால் கல்வி வளாகங்களில் “கற்றலில் சிறந்த இரண்டாம் தலைமுறையாக’’ தமிழ்த் தலைமுறை பல்லினத்துள் பட்டம் பெற்றது. இதனால் ஆளுமையில் மட்டுமல்லாது அறிவிலும் சிறந்த இனமாக தமிழர்கள் இடம் பிடித்தனர்.

தமது தாய் மொழி புழக்கத்திலுள்ள மொழியாக மாறுவதோடு வளரும் தலைமுறை மறவாத தாய் மொழியாகவும் உயிர் வாழ வேண்டுமெனக் கருதியதனால் இந்த முப்பது ஆண்டுகளில் தமிழர்கள் அதிகமாக வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ் பள்ளிகளை நிறுவியுள்ளனர். மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை அடங்கிய வகுப்பறைகள் உண்டு. சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறையினரே தாய் மொழியைக் கற்று வருகின்றனர். தமிழினத்தின் தாய்மொழிப் பரம்பலை சுட்டி நிற்கின்றது. ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி, முத்தமிழ் விழா, கலை விழா, வாணி விழா, என்னும் எண்ணற்ற அறிவுசார், மரபுசார் நிகழ்வுகள் தமிழ் பள்ளியைச் சார்ந்து நடத்தப்படுகிறது.
தமிழினமானது பள்ளிகளை பாடம் கற்பதற்கான இடமாக மட்டுமல்லாது பலதிறன்களை வளர்க்கும் இடமாக கருதி வந்தமைக்கு இவை சான்றாகும். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்ற” ஔவையின் வாக்கிற்கமைய சுவிட்சர்லாந்து நாட்டில் 22 திற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளது. அதிலும் 18 ஆம் நூற்றாண்டில் வேலுநாச்சியார் ஆசைப்பட்டது போல தமிழால் பூசை செய்யும் ஆலயமாக ஞானலிங்கேச்சுவரர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

இனத்தின் தலைமுறைப் பெருமையில் ஆன்மிகமும் ஒன்றென உணர்ந்த சுவிட்சர்லாந்து வாழ் புலம் பெயர் தமிழர்கள் கோயிலைச் சார்ந்த பூசைகள் திருவிழாக்கள் மற்றும் தேர்த்திருவிழா, தீ மிதிப்பு, காவடியாட்டம் விரதங்கள் அபிஷேகங்கள் அனுட்டானங்களென்று யாவற்றையும் கடைப்பிடித்து நடத்தியும் வருகின்றனர்.
தமிழ் இனத்தின் பெருமை பேசும் வாணிபம் இந்த நாட்டிலும் உயிர்பில் உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களான சூரிச், பேர்ன், ஜெனிவா போன்ற நகரப் பகுதிகளில் தமிழர்களுடை உணவு விடுதி, புடவைக் கடை, நகைக் கடை, மளிகைக் கடை, காய்கறிக் கடை, மாமிசக் கடை மட்டுமல்லாது அழகு நிலையங்கள், ஆயுர்வேதிய நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள் என எண்ணற்ற வணிக நிறுவனங்கள் தமிழினத் தலைமுறைப் பெருமை பேசுகின்றன. தமிழர் தம் மரபுக் கலைகள் வளரும் தலைமுறையினரால் இந்த நாட்டிலும் கட்டிக்காக்கப்படுகிறது. சதிராட்டம், வயலின், நாதசுரம், வீணை, புல்லாங்குழல் போன்ற மரபுக் கலைகள் பயிற்றுவிக்கும் தனியார் கலைக் கூடங்கள் இந்த நாட்டில் பலவருட காலங்களாக இயங்கி வருகின்றன. முறைப்படி தமது மரபுக் கலைகளை கற்று முடித்த கலைஞர்கள் அரங்கேற்றம் செய்து பல்லினக் கலாச்சாரத்தினருக்கும் தமது மரபுக்கலையை அடையாளப்படுத்தி வருகின்றனர்.

அத்தோடு தமிழர் இனப் பெருமை பேசும் நிகழ்வுகளில் பறையாட்டம், கூத்து, கும்மியாட்டம், கோலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகளை வளரும் தலைமுறையினர் மேடையேற்றி தம்மவர்களை மகிழ்விப்பதோடு இனப் பெருமையும் பேசி நிற்கின்றனர்.
நாட்டிய மயில், இசைக் குயில் போன்ற போட்டி நிகழ்வுகளும் வருடந்தோறும் நடத்தப்பட்டு தமிழின மரபுக் கலைகளையை அழியாது வளர்த்துச் செல்கிறது எனலாம்.தமிழின மறவர் பெருமை பேசும் “நடுகல் வழிபாடு’’ சுவிட்சர்லாந்து நாட்டு புலம்பெயர் தமிழர்களால் வருடந்தோறும் கார்த்திகை -27 ஆம் நாளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் எங்கும் பரந்தும் வாழும் தமிழினத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களை “தமிழ்களறி” என்ற கூடத்தில் சேகரித்து பாதுகாத்தும் வருகின்றனர்.
இவையாவும் தமிழினம் புலம் பெயர்ந்த நாடுகளில் தமது எச்சங்களை கட்டிக்காக்கும் பெருமையை எடுத்து இயம்புகிறது எனலாம்.

ஊடகத்துறையில் கூட தமிழினத்தின் தலைமுறைப் பெருமை நாளும் பொழுதும் உலகம் முழுவதும் வலம் வருகின்றது எனலாம். குறிப்பாக செய்தித்தாள், வானொலி, இணையம் போன்றவை சுவிட்சர்லாந்து வாழ் புலம் பெயர் தமிழர்களின் இனப் பெருமையை கடல் கடந்தும் கொண்டு சேர்க்கின்றது. ஓரினம் புலம் பெயர்ந்த நாடுகளில் எத்தகைய வீரியத்துடன் பயணிக்கிறது என்பதை சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்களின் தலைமுறைப் பெருமை சாட்சியம் சொல்லும்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.