நேரமும் ஆளுமையும்!
நேரம் விலைமதிப்பில்லாதது. இது அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக சுய தொழில் செய்பவர்கள் அவர்கள் நேரத்தை சரியாக நிர்வகிக்காமல் போகும் போது அவர்களோடு சேர்த்து அவர்களின் தொழிலாளர்களும் நஷ்டத்தை அடைகிறார்கள். சரியான நேர நிர்வாகத்தை தெரிந்து கொள்ள இந்த தொகுப்பு உங்களுக்கு உதவும்.
உங்கள் இலக்கை தெரிந்து கொள்ளுங்கள்:
உங்கள் வியாபாரத்தின் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை திட்டமிடுங்கள். உங்கள் வியாபார இலக்குகளை அடைவதற்கான செயல்பாடுகளில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
வருவாய் ஈட்டுவதும் தொழிலை வளர்ப்பதும் தான் உங்கள் முதல் வேலை. ஆகையால் உங்கள் எல்லா செயல்களும் இந்த விஷயத்தை நோக்கியே இருக்க வேண்டும்.
புத்திசாலித்தனமாக முன்னுரிமை கொடுங்கள்:
நாள் முழுவதும் நீங்கள் செய்ய இருக்கும் வேலையை பட்டியலிடுங்கள். முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
முக்கியம் மற்றும் அவசரம்:
இதனை உடனடியாக செய்ய வேண்டும். இப்பொழுதே தொடங்குங்கள். முக்கியம் ஆனால் அவசரம் இல்லை. இப்படி பட்ட வேலைகளை செய்வதற்கான நேரத்தை நீங்களே தீர்மானியுங்கள்.
அவசரம் ஆனால் முக்கியம் இல்லை அவசரமாக செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் இதன் மூலம் பெரிய பிரயோஜனம் இல்லை என்றால் இத்தகைய வேலைகளுக்கு ஒரு பிரதிநிதியை பயன்படுத்துங்கள். அவசரமும் இல்லை, முக்கியமும் இல்லை ‘‘பிஸியாக இருப்பது’’ என்ற மாயையை வழங்கும் இந்தவிதமான வேலைகளை பிறகு கவனித்து கொள்ளலாம். நீங்கள் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களை குறித்து வையுங்கள். வேலையை முடித்தவுடன் உங்கள் குறிப்பிலிருந்து அதனை நீக்கி விடுங்கள். இது வேலையை முடித்த திருப்தியையும் அடுத்த வேலையை தொடர்வதற்கு ஒரு உந்துதலையும் கொடுக்கும்.
இல்லை என்று சொல்லுங்கள்:
நீங்கள் தான் முதலாளி. உங்கள் வேலையில் எது அவசியம், எது நேரத்தை விரயம் செய்வது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் அவசியம் இல்லாத வேலைகளுக்கு இல்லை என்று மறுத்து சொல்லி பழகுங்கள். இதை எல்லா இடங்களிலும் மேற்கொள்ளலாம். உங்கள் நோக்கம் அதிகமான உற்பத்தியில் மட்டுமே இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் இருப்பதை உங்கள் அனுபவத்தில் இருந்து கற்று கொள்ளுங்கள்.
முன்கூட்டியே திட்டமிடுங்கள்:
ஒரு நாளில் என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்ற ஒரு தெளிவான பார்வை இல்லாமல் அந்த நாளை தொடங்குவது நேர விரயத்தையே கொடுக்கும். இப்படி விரயமாகும் நேரம் உங்கள் வேலைகளை திட்டமிடுவதற்கான நேரத்தை விட பல மடங்கு அதிகம். சரியான திட்டமிடல் இல்லாதிருந்தால், எதையுமே முடிக்காத நாளாக கூட அந்த நாள் அமையலாம்.
ஒரு நாளின் முடிவில் – அந்த நாளின் முடிவில், உங்களால் முடிக்கப்பட்ட வேலைகளை குறிப்பிலிருந்து நீக்குங்கள். அடுத்த நாள் நீங்கள் செய்ய வேண்டுவனவற்றை குறிப்பாக எழுதி வையுங்கள். இதனால் மறுநாள் ஒரு தெளிவான மனநிலையுடன் தொடங்கும்.
ஒவ்வொரு நாளும் காலையில் முதல் வேலையாக – சில நிமிடங்களை செலவழித்து உங்கள் வேலைப்பட்டியலில் உள்ள வேலைகளை முன்னுரிமைப்படுத்துங்கள்.
கவனச் சிதறல்களை களைந்திடுங்கள் :
உங்கள் வேலைகளின் நேரத்தை அதிகரிக்க, உங்க ஸ்மார்ட் போன், ஈ-மெயில் போன்றவற்றை அணைத்து வைப்பது நலம். இவைகள் உங்கள் நேரத்தை அதிகமாக சாப்பிட்டு விடும். உங்கள் வேலைகளுக்கு சிறிது இடைவெளி கொடுத்து இவற்றை பயன்படுத்தும்போது உங்கள் மூளைக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த இடைவெளியில், உங்கள் அலுவலக பணியாளர்களிடம் பேசலாம். தொலைபேசியில் தொழில் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளலாம்.
உங்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்:
உங்கள் வியாபாரத்திற்கு நடுவில், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். சரியான அளவு தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள உதவும். கூர்மையான மூளை எப்போதும் அதிக செயலாற்றலுடன் இருக்கும் மற்றும் அது உங்கள் நேரத்தையும் மிச்சமாகும்.
பா. கல்பனா
Leave a Reply