அடிச்சாத்தான் படிப்பு வரும். உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள், முன்னேற்றத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன!

Share Button

அடிச்சா தான் படிப்பு வரும்!

”உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். முன்னேற்றத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன!” என்ற வரிகளின் அர்த்தத்தை அனுபவப்பூர்வமாக உணர்க்கின்றேன்.

புதுபுது அர்த்தங்களைக் கொடுப்பதற்காகவே ஒவ்வொரு நாளும் பிறக்கின்றன. அனுபவங்கள் தான் மனிதனைச் சிறந்தவன் ஆக்குகின்றன. மனிதன் சிறந்தவனாகும் போது உழைப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிக்கின்றான். ஒவ்வொரு நாளும் அவன் பெறும் அனுபவம் புதிய உத்தியினை கையாளக் கற்றுக் கொடுக்கின்றது.

பள்ளியினுள் நுழைந்தவுடன், “குட்மார்னிங் சார்!” என மொட்டுக்களை விரித்து பூக்கும் பூக்களைப் போன்று மலர்ந்த சிரிப்புடன் ஓடிவரும் குழந்தைகளின் பேரன்பு , அன்றைய நாளின் உதயத்திற்கான சாட்சியம். பதிலுக்கு, “குட்மார்னிங் டியர்” எனும் போது ஒவ்வொரு குழந்தைகளின் முகத்தில் பூக்கும் சிரிப்பில், இன்னும் பிரகாசமாகின்றேன்.

பள்ளியில் நுழைந்து, இருசக்கர வண்டியில் இருந்து இறங்கும் முன்பே, முந்தியடித்து ஓடிவந்து
பையை பிடிங்கிச் செல்லும் குழந்தைகளிடம் பெறுகின்றேன், துளசியின் புத்துணர்ச்சியை! புதிய காற்று, புது மணம். இன்னும் பரவசம். இந்த காற்றின் நறுமணத்தை ஆசிரியர்கள் மட்டுமே நுகரமுடியும். வேறு எவருக்கும் கிடைக்காது.

இந்த வரம் வாங்கி வந்தவர்கள் ஆசிரியர்கள். குழந்தைகள் நம்மிடம் சிநேகத்துடன் சிரிப்பதற்கு கொஞ்சம் உழைக்க வேண்டும். அதை அனுபவம் தான் கற்றுத்தரும். எல்லா ஆசிரியர்களாலும் குழந்தைகளுடன் இணைந்திருக்க முடிவதில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் முயற்சிக்கின்றார்கள். சிலர் பணிபுரியும் போதே குழந்தைகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக பயணிக்கின்றனர்.

ஆனால், அது பலருக்கும் கைவரவில்லை என்று வருத்தப்படுகின்றனர். உண்மை அதுவல்ல. பல
ஆண்டுகள் சென்ற பின் , தம் ஆசிரியரை நினைத்து பூரித்துக் கொள்ளும் பருவம் தப்பி பூப்பவர்களும் உண்டு. எப்போதும் ஆசிரியர்கள் உழைத்துக் கொண்டுத்தான் இருக்கின்றார்கள். குழந்தைகள் குறித்து அவர்கள் போடும் மனக்கணக்கு பல சமயங்களில் தப்பாகிவிடுகின்றது.

அதற்கானச் சூத்திரம் வசப்படுமானல், ஆமணக்கானக் கணக்கு கூட இனிப்பது போல் குழந்தைகளுக்கு பிடித்தமானவர் ஆகிவிடுவோம். “நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக
இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு!” என்கிறார் அப்துல் கலாம். ஆம்! இன்று பல ஆசிரியர்கள் குழந்தை நேயத்துடன் இருப்பதை காண்கின்றேன். ஆசிரியர்களின் எண்ணம் பெருமளவில் மாறியிருக்கின்றது.

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் அதிகரித்திருப்பதைக் காண்கின்றேன். புது
புது முயற்சிகள். புது புது அர்த்தங்கள் தருபவையாக இருக்கின்றன. அன்பால் சாதிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்! சமூகம் ஆசிரியர்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் இருந்து,
ஆசிரியப் பணியினைத் தொடங்கினால், குழந்தைகளின் எதிர்காலம் நம்பகத்தன்மையுடையதாக இருக்கும். நாம் காட்டும் சரியானப் பாதையில் பயணிக்கும் குழந்தைகள் , அப்பாதை வழிச் செல்லும் போது நம்மை தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்வார்கள்.

நமக்கான எதிர்காலமும் சிறப்பாகஅமையும். ஒவ்வொருவர் வாழ்விலும் பிடித்த ஆசிரியர்கள் மிக மிக அரிய எண்ணிக்கையிலே உள்ளனர். குழந்தைகளைத் தாங்கிப் பிடித்து சரியானப் பாதைக்கு அழைத்து செல்பவர்களையே இச்சமூகம் தூக்கிக் கொண்டாடுகின்றது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

இன்று (15/7/2019) மதியம் உணவு வேளைக்கு பின்பு, வகுப்பு தொடங்கி அரைமணி நேரம் ஆன போது, காக்கி சட்டையுடன் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். அவர் ஒரு ஆட்டோ டிரைவர் என்பதை அவர் கையில்
வைத்திருக்கும் கீ செயின் காட்டிக் கொடுத்தது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றார். எதற்கு என்று கேட்டேன். சும்மாத்தான் என்றார். “அட! எதுவும் குடும்ப பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள்.

பயப்பட வேண்டாம் பார்க்க அனுமதிப்பேன்” என்றேன். அவர் இல்லை எனச் சிரித்தார். சும்மா! இந்த
பக்கம் சவாரி வந்தேன். அப்படியே குழந்தைகளைப் பார்த்துட்டு போகலாம்ன்னு தான்..” என இழுத்தார். நான் சிரித்தப்படி ஆயா அம்மாவை அழைத்து, அவர் கூறிய குழந்தைகளை அழைத்து வரச் சொன்னேன். அவர் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். வகுப்பறைக்கு வெளியே மைதானத்தில் வைத்து பேசிச் செல்லும்படி
கூறினேன். அதற்குள், குழந்தைகளை, ஆயா அம்மா அழைத்து வந்திருந்தார்.

அவர் தன் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கி வந்திருந்தார். ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையைத் தூக்கி முத்தம் தந்தார். நான்காம் வகுப்பு படிக்கும் அவரது பையன் ஓடி வந்தான். அவர் கண்களில் நீர் வழிய அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் தந்தார். அவர் கையில் வைத்திருந்த தின்பண்டத்தை அவனுக்கு கொடுத்தார். அவன் தேம்பி அழுக ஆரம்பித்தான். “சாரிடா.. அப்பா ஏதோ கோபத்தில் காலையில் அடிச்சுட்டேன்.

மனசு கேட்கலை.. அதான் பார்க்க வந்துட்டேன். சாரிடா” என அவனிடம் மன்னிப்பு கேட்டார். சாரி…! என்றபடி அவர் மகனிடம் தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆயா அம்மா மெதுவாக அவரிடம் சென்று பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார். அவர் ஆயா அம்மாவிடம் காலையில் நடந்த நிகழ்வை கூறினார். ஆயா அம்மா என்னிடம் அக்கதையைக் கூற வந்தார்.

குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவர் வாங்கி வந்தபால்பன்னை பிட்டு, ஊட்டி விட்டார். அவர் முதலில் மகளுக்கும் ஊட்டி விட்டார். இருவரிடமும் விடை பெற்றார். நான்காம் வகுப்பு பையன் மாடிப்படி ஏறி வகுப்பறைக்கு செல்லும் வரை நின்றிருந்தார். அவன் மாடியில் இருந்து இவரைப் பார்ப்பான் எனக் காத்திருந்தார். அவன் அவர் காத்திருப்பார் என அறிந்து, மாடிச் சென்றதும் திரும்பிப் பார்த்தான். அவரைப் பார்த்த அடுத்த நொடி, அவரை நோக்கி முத்தங்களைப் பறக்க விட்டான். அவர் பதிலுக்கு எவரை பற்றியும் கவலைப் படாமல் முத்தங்களை வழங்கினார்.

ஆயா அம்மாவின் கண்களில் கண்ணீர் குளமாக பெருகியது. அவர் குழந்தையாக மாறி , அவனுக்கு முத்தத்தைப் பறக்க விட்டார். தன்னை சுற்றி உள்ளவர்கள் இதைப் பார்ப்பார்களே என்பதை குறித்து அவர் நினைத்து பார்க்கவில்லை. அவர் அது பற்றி கவலைக் கொள்ளவில்லை. காற்றில் பறக்கவிடும் அப்பாவின் முத்தம் பரிசுத்தமான அன்பு என்பதை உணர்ந்தேன்.

அந்த அன்பு பள்ளி எங்கும் காற்றில் பறந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் பரவியது. இப்போது பள்ளியே அன்பாக அழகாகக் காட்சி அளித்தது.  குழந்தைகளின் மீது அக்கறை கொண்டுள்ள பள்ளி.யாக மாறியது. அன்பு கொண்ட மனம், தன் குழந்தையைத் தண்டித்து விட்டோமே எனப் பதறியது. அந்த செயல் மனதை புண்படுத்த, குழந்தைகளை காண அவரை ஓடோடி வரச் செய்தது. ஆம்! அன்பு மாயங்கள் புரிய வைக்கும். மனக்காயங்கள் ஆற்றும் மந்திரம் தெரிந்தது.

குடும்பத்திற்கு மட்டுமல்ல பள்ளிக்கும் தேவை அன்பான ஆசிரியர்களே! இன்றைய தேவையும் அதுவே.
அவர் கடந்த அந்த நொடியில் சிரித்தபடி நான்காம் வகுப்பு சுகன்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) பாத்ரூம் சென்று கொண்டிருந்தாள். என் நினைவுகள் சுழலன்று கடந்த காலத்தை நோக்கி பயணித்தது. சுகன்யா கடந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு படித்தாள். ஒவ்வொரு வாரமும் திங்கள் அவரது அம்மா பள்ளிக்கு வந்துவிடுவார். “சார்! அடிச்சாத்தான் படிப்பு வரும்.

காலையில் எட்டு மணி வரை தூங்குகிறா.. பல் தேய்த்து, குளிச்சு, சாப்பிட்டு வர்றதுக்குள்ள வேன் போயிடுது. மணி ஒன்பதாகிடுது. டீச்சரும் அடிக்க மாட்டிங்கிறாங்க.. நீங்களும் அடிக்க மாட்டிங்கிறீங்க .. அவ எப்படி திருந்துவா.. உங்களைப் பார்த்தாலே நடுங்க வேண்டாமா? எச்சம் கிட்டே சொல்லுவேன்னா.. நக்கலா சிரிக்கிறாள். தயவு செய்து என் மகளை அடிங்க.. இல்லை டிசி தாங்க.” எனச் சண்டைக்கு வருவார்.

“சரி! கண்டிச்சு வைக்கிறேன். பாப்பா! இனி அம்மா சங்கடப்படுத்துற மாதிரி நடக்க கூடாது. பாரு உன்னாலே உங்க டீச்சருக்கும் , எனக்கும் திட்டு கிடைக்குது. அடுத்த வாரம் பார்ப்பேன்.. சரியா வந்திடணும்” என்பேன். “இப்படி பேசினா.. எப்படி அவளுக்கு பயம் வரும். மண்டையில் நாலு கொட்டு வச்சா
பயம் இருக்கும்” என அவளது மூடியை இழுத்தார்.

ஆசிரியர் அவரைத் தடுத்து, குழந்தையை வகுப்பிற்கு செல்ல வலியுறுத்தினார். நல்ல டீச்சர் , நல்ல எச்சம். அடிச்சா தான் படிப்பு வரும். அடியாத மாடு படியாது. நான் தானே அடிக்கச் சொல்றேன். நான் படிக்கிற காலத்தில் டீச்சர் வர்றாங்கன்னு தெரிஞ்சா பத்தடி தள்ளி ஓடுவோம். இப்ப பாரு பயம்ன்னா என்னன்னு
தெரியாமலே கிலோ கணக்கில் போச்சு…” நான் அவரிடம், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்து கூறினேன்.

”ஆர்டிஇ 2009ன் சட்டப்பிரிவு 17(1) படி எந்தக் குழந்தையையும் உடல் ரீதியான தண்டனைக்கோ அல்லது
மனரீதியான துன்புறுத்தலுக்கோ உட்படுத்தப்படக் கூடாது. மேலும், பிரிவு 17(2) ன்படி மேற்கண்ட துன்புறுத்தல் பள்ளி அளவில் எவர் மூலமாவது மேற்கொள்ளப்பட்டிருப்பின் அரசுப் பணி விதிகளின் கீழ் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றேன். என் பள்ளியில் எந்த ஆசிரியரையும் எதற்க்காகவும் அடிப்பதை அனுமதிப்பதில்லை.

”அவள் திருந்தவில்லை எனில் அடுத்த வருடம் டிசி கட்டாயம் தருகின்றேன். அதற்குள் திருந்தி விடுவாள்” என்றேன். “சார்! எனக்காக ஒரு அடி போடுங்க.. அப்பாத்தான் அவ சரிப்படுவா” என்றார். நான் சிரித்தப்படி நகர்ந்தேன். இந்த வருடம் பள்ளித் தொடங்கி ஒருமாதம் மேல் ஆகப்போகின்றது. அவரைக் காணவில்லை. இன்று வரை அவர் டிசி கேட்டு வரவில்லை. அன்பு அந்தக்குழந்தையை சரிப்படுத்தி இருக்கும் என்று
நம்புகின்றேன்.

குழந்தைகள் இயல்பில் துறுதுறுப்பானவர்கள். அதேவேளையில், கொஞ்சம் சேட்டையும் செய்பவர்கள். சேட்டை செய்யாத குழந்தையை இவ்வுலகில் காண்பது அரிது. அன்பு மட்டுமே எல்லோரையும் திருந்தச் செய்யும். அன்பானவர்களையே குழந்தைகள் தேடுகின்றார்கள்; விரும்புகின்றார்கள். குழந்தைகள் உலகம் அபூர்வமானது.

அவ்வுலகினை காண்பதற்கு குறைந்த பட்சம் பட்டாம்பூச்சியாக மாற முயலவேண்டும். ”The only thing worse is being blind is having sight but no vision” என்று ஹெலன் ஹெல்லர் குறிப்பிடுகின்றார். நம் பார்வையை மாற்றிக் கொண்டால் குழந்தையின் உலகினைக் காண முடியும். முதலில் குழந்தைகளிடம் அன்பு செய்ய கற்றுக் கொள்வோம். அடிப்பதால் எந்த குழந்தையையும் மாற்றிவிட முடியாது என்பதை உணர்வோம்.

 

 

 

க. சரவணன். தலைமையாசிரியர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “அடிச்சாத்தான் படிப்பு வரும். உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள், முன்னேற்றத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன!”

  1. Suriya says:

    வேறு எந்த பணியிலும் இல்லாத இன்பம் ஆசிரியர் தொழிலுக்கே சார்ந்து… அருமை சகோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *