சக்தி தாண்டவம் : பெண்ணினத்துக்காகவும் பெண்மைக்காகவும் நீதிப்போரிடுகின்றாள்!

Share Button
சாவித்திரி எமனிடம் வாதாடி சத்தியவான் உயிரை வென்றது போல்…
நீதி தேவனிடம் பெண் தேவதை பெண்ணினத்துக்காகவும் பெண்மைக்காகவும் நீதிப்போரிடுகின்றாள்… இதோ…
……………………………………………………………………………………………………………………………………………………………………………………..
நீதி தேவன் : –  பெண்ணே! முதற்பொருளென்றுமை உயர்வாய் – நவிலும் நாட்டில்
பெருந்துயர் கண்ணில் ஏந்தி நீதிக்கு நிற்பதென்ன?
பெண் தெய்வம் : – தெய்வமும் பலகூறாக்கி பிரித்து பேதம் – பெய்து
திக்கெட்டும் பன்முகமாய் காவல் நின்றும்
ஏனோ? பெண்மை களவுற வாழும் நாடோ?
நீதி தேவன் : –  எண்ணிலடங்காச் கடுஞ்சட்டம் லட்சத்தில் காவலர்காள் – உமைக்காக்கத்தானம்மா!
பெண் தெய்வம் : –  எள்ளலோ! பலி ஆடுகள் கிடைத்தவுடன் – கருப்பாடுகளுக்கு
காவலென லட்சியத்தை லட்சத்தில் புதைப்பீரோ – வீரர்காள்?
நீதி தேவன் : –  மலைமகளாய், அலைமகளாய், திருமகளாய் உமைத்தொழுதோம்!
பெண் தெய்வம் : –  விலைமகளாய் ஆக்கியதும் நீர்தானே பாவி மாக்காள்!
நீதிதேவன் : –  விண்வெளி, தொழில்நுட்பமென புகழ் எய்தினாய் – ஆண்
விஞ்சினாய்! வீட்டிலடைந்த பெண்டிரும் உலகளந்த வலைதளமே!
பெண் தெய்வம் : –  மானுடத்தை வெல்ல என் எழுத்தாணி – துடிக்கிறதே!
மேயாத மானும் மாயத்தளத்தில் சிக்கும் – மீனெனவோ?
வேற்றோர் நகல் இணைக்கும் நிழற்படமோ?  – ஈனப்பொறி
வைப்பீரோ? விண்வெளிவரை கூறுபோட்டு விற்பீரோ? – எம்மானம்…
நீதி தேவன் : – துட்சமாய் துணிந்து துட்சாதன இணையத்தின்
துகிலுரித்து தேசிய வியாதி இணையத்துடன் – போரிடவேண்டுமம்மா…!
பெண் தெய்வம் : – பாவிகள் சூழ்ச்சியில் ‘பாண்டவர் துணைநிற்க’ – திரௌபதி
பழிதீர்த்தாள்! சமூக முட்களில் கிழிந்த – ரோஜாக்களுக்கு
தூற்றுவாரினும் பலமழிக்கும் குடும்பப் பின்புலன்களேயெமை – பாடையேற்றும்!
திக்கற்ற கையறுநிலையில் துணிந்த பெண்ணினத்தை – அழிக்கும்
பழிச்சொற்கள்… சரித்திர நாயகியாய் வரலாற்றில் இடம்வேண்டோம்
புவிமைந்தர்காள்! தரித்திரச் சாக்கடையில் எமைத் – தள்ளி
அழிக்காதீர்! ஐந்தென்ன ஐம்பத்தைந்தென்ன நரமாமிசமிருகமுன்னே – ஐயோ… கேளீரோ?
நீதி தேவன் : –  அடிக்கு அடி சுங்கவரி விதித்த – மன்னர்காள்!
அன்பும் மனிதமும் விதைக்க மறந்தீரே! – ஐயோ! தர்மம்வழுவியதோ?
போதும் இனி…
பெண்  தேவதை : –  உதடுகள் தாண்டி நான் உதிர்க்கும் – வார்த்தைகளினி
உலகை ஆளுமடா !  விதியும் நானே புவியும் எனதே!
தத்தரிகிட தத்தரிகிட தாம்… தத்தரிகிட தத்தரிகிட தாம்…
நீதிதேவன் : –   தேவி தாண்டவம் பாருமடா… தாயே – காளீ…!
காலக் கடிவாளமும் ப்ரும்ம எழுத்தாணியும் – நின்
காலடி கிடக்குமடீ…! நீதி தேவியும் நீயே!
பாவியை அழிப்பாய்! நச்சுகள் ஒழிப்பாய்!
புது உலகம் படைத்துவிடு! தேவி சூலம் எடு…!!!
தத்தரிகிட தத்தரிகிட தாம் தத்தரிகிட தத்தரிகிட தாம்…
விஜி வெங்கட், ஹைதராபாத்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “சக்தி தாண்டவம் : பெண்ணினத்துக்காகவும் பெண்மைக்காகவும் நீதிப்போரிடுகின்றாள்!”

  1. விஜயலெட்சுமி வெங்கட் says:

    இலக்கியம் , புதுமை, புரட்சி என அனைத்தும் இணைந்த கதம்பமாய் மணம் பரப்பும் புதுவரவு , மக்கள் மனம் படித்த தனிவரவு.சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *