கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்!

Share Button
கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ,72,000 கொடுக்கப் போவதாகவும்,  வறுமையை ஒழிக்க இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தப்போவதாகவும் கூறினார். .
கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது
தமிழ் மொழியும், தமிழக மக்களும் அவர்களின் கலாச்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், தமிழக மக்களின் குரல் இதுவரை டெல்லியில் ஓங்கி ஒலிக்கவில்லை என்பதே உண்மை. இனி அந்த நிலை தொடராது. இனி தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். தமிழர்களின் குரலைப் புறக்கணிப்பது எப்படி சரியான இந்திய அடையாளமாக இருக்க முடியும். எனவேதான் தமிழ், தமிழக மக்கள், அவர்கள் கலாச்சாரத்தை நான் உயர்வாக மதிக்கிறேன். ஆனால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஒரே சிந்தனையை ஒரே கலாச்சாரத்தைத் திணிக்க நினைக்கிறார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் ஆளும் அதிமுகவை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அவரால் அடிமைப்படுத்த இயலாது. இங்குள்ள மக்கள் வெறுப்பு அரசியலுக்கு அல்ல அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் ஆட்சி செய்வதால் மோடியை நாங்களும் திமுகவும் எங்கள் ஆதரவுக் கட்சிகளும் எதிர்க்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 15 பேருக்காக ஆட்சி செய்திருக்கிறார். அவர்கள் அனில் அம்பானி, நிரவ் மோடி, மெஹூல் சோஸ்கி போன்ற பெரும் பணக்காரர்கள். தமிழகத்தின் ஏழை மக்கள், விவசாயிகள், பாட்டாளிகளுக்குச் செல்ல வேண்டிய நலத்திட்டத்துக்கான பணம் எல்லாம் இந்த பெரும் முதலாளிக்குத்தான் சென்றிருக்கிறது.
கடந்த தேர்தலின்போது ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார் மோடி. ஆனால் அப்படிச் செய்யவில்லை. அவர் பொய்யுரைத்தார். இதைப் பற்றி நான் சில பொருளாதார நிபுணர்களிடம் பேசினேன். ஒருவேளை நாட்டில் உள்ள ஏழை மக்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டுமென்றால் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கணித்துக்கூறுமாறு சொன்னேன்.
ஆனால், எனக்கு நீங்கள் பக்கம் பக்கமாக அறிக்கை தர வேண்டாம். எளிமையாக யோசனை சொல்லுங்கள் என்றேன். அவர்கள் ஒரு துண்டு பேப்பரில் ஒரு எண்ணை எழுதிக் கொடுத்தார்கள். அதில் ரூ.72,000 என எழுதப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ,72,000 கொடுத்தால் போதுமானதாக இருக்கும் என அந்த பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.
இதுதான் நான் வறுமையின் மீது நடத்தப்போகும் சர்ஜிக்கல் ஸ்டிரைக். இதன் மூலம் ஏழைகளுக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கும். அதிலும்கூட பெண்களுக்கு நியாயம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அதனால் இந்த நியாய யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு பெரும் பணக்காரர்களுக்காக வேலை செய்யும் பிரதமர் மோடி தமிழகத்திலிருந்து டெல்லி சென்று போராடிய விவசாயிகளை ஒரு முறையேனும் பார்த்தாரா?
லட்சம், கோடிகளில் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பெரும் முதலாளிகளை இன்னும் சட்டத்துக்கு உட்படுத்த முடியவில்லை.
ஆனால், இங்கு ஏழை விவசாயி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால் சிறை செல்ல வேண்டியிருக்கிறது. இது அநீதி அல்லவா? இந்த அநீதியை துடைக்க விவசாயக் கடன் சட்டத்தில் நாங்கள் திருத்தம் கொண்டு வருவோம். இனி எந்த ஒரு ஏழை விவசாயியும் வங்கிக் கடன் திருப்பிச் செலுத்த இயலாததற்காக சிறை செல்ல வேண்டியிருக்காது
பணமதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பின் மூலம் பிரதமர் மோடி மக்களின் உரிமையைப் பறித்தார்.
ஜிஎஸ்டி என்ற ‘கப்பார் சிங் டேக்ஸ்’ (கேலிக் குறியீடு) மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை நலிவடையச் செய்திருக்கிறார். தமிழகத்தின் திருப்பூரில் ஜவுளித் தொழிலும், காஞ்சிபுரத்தில் பட்டுத் தொழிலும் முடங்கி தவிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றிற்கு தீர்வு காணப்படும்.
நியாய யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்போது ஏழை மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். நாங்கள் வங்கியில் செலுத்தும் பணத்தை எடுத்துக் கொண்டு தங்களுக்குத் தேவையான ஆடையும், அத்தியாவசியப் பொருட்களையும் ஏழை மக்கள் வாங்குவார்கள். இது ஒரு புதிய பொருளாதாரத்துக்கு வழிகாட்டும். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இதைத்தாண்டி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் சில யோசனைகளை பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்.
இறுதியாகச் சொல்கிறேன்… தமிழகத்தை நாக்பூரில் இருப்பவர்கள் ஆட்சி செய்ய விடமாட்டோம். தமிழகத்தை தமிழக மக்கள் தான் ஆட்சி செய்வார்கள். திமுகவுடன் கூட்டணி அமைத்ததும் தமிழர்களின் முதல்வராக ஸ்டாலின் ஆட்சி செய்வார். இவ்வாறு அவர் பேசினார்
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *