காங்கிரசும், திமுகவும் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி, கோவை பொதுக்கூட்டத்தில், கடுமையாக விளாசி பேசினார்!

Share Button
கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்திருந்தன. இதில் பங்கேற்பதற்காக, இரவு 7 மணியளவில் தனி விமானத்தில் கோவை வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
முதலாவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். இதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடி
பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது
கோவையில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்புகளை யாராலும் மறக்க முடியாது. ஆனால், இது பழைய இந்தியா கிடையாது. புது இந்தியா. இங்கு நம் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு, வட்டியும், முதலுமாக திருப்பித் தரப்படும். எதிர்க்கட்சிகள் நமது ராணுவத்தின் மீது தேவையற்ற சந்தேகங்களை எழுப்புகின்றன. சர்ஜிகல் தாக்குதல் அல்லது விமானப்படை தாக்குதல் நடைபெற்றதா, என்று அவர்கள் கேள்வி எழுப்புவது நம்மை காப்பாற்றுவதற்கு உதவாது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து தீவிரவாதிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பர்கள். அந்த தேர்தல் அறிக்கையை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் ரீகவுண்டிங் அமைச்சர் தான் (ப.சிதம்பரத்தை சொல்கிறார்), காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் என்று அறிந்தபோது நான் வியப்படையவில்லை. அவருக்கு தேவையெல்லாம் தனது குடும்பத்தை ஜாமினில் வெளியே எடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினர் பற்றி எந்த ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. காங்கிரஸ் மற்றும் திமுக வுக்கு வாக்களிப்பது என்பது வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு தான் வழி செய்யும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வரிகளை ஏற்றுவார்கள். இது நடுத்தர குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
காங்கிரசுக்கு நடுத்தர குடும்பங்களை வஞ்சிப்பது புதிது கிடையாது. ரீ கவுண்டிங் அமைச்சர் மிகவும் ஆணவமாக நடுத்தர மக்கள் ஏன் விலைவாசியைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று கூறியவர்தான். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதுமே நடுத்தர மக்களுக்கு உறுதுணையானது. விலைவாசியை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம். ஒரு கோடி வரையிலான சிறு தொழில் கடன் வாங்கவேண்டும் என்றால் வெறும் 59 நிமிடங்களில் அதை பெற முடியும். கோவையிலிருந்து, சென்னைக்கு செல்வதை விட குறைவான நேரம் அது.
இந்த ஆண்டு நாம் போட்ட பட்ஜெட்டில், ஆண்டுக்கு ஐந்து லட்சம் வரையிலான தனிநபர் வருமானம் கொண்டவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளோம். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நடுத்தரவர்க்கத்தின் பணம், நாட்டின், வளர்ச்சிக்காகத்தான் பயன்படுத்துவோமே தவிர, வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசை போல பயன்படுத்த மாட்டோம்.
கேரளா, இங்கே இருந்து வெகுதூரத்தில் இல்லை. அங்கே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைந்து கொண்டு கேரள மாநிலத்தின் பாரம்பரியத்தை சீரழிந்து வருகின்றனர். இருவரும் ஒருங்கிணைந்து, சபரிமலையில் ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருகிறார்கள். கோவையில் இருந்து கொண்டு அவர்களுக்கு நான் சொல்கிறேன்.. கம்யூனிஸ்ட் சக்திகள் எங்களது நம்பிக்கையை கெடுத்துவிட முடியாது. கேரள மக்களின் கலாச்சாரம், மற்றும் நம்பிக்கைக்கு பாஜக உறுதியாக துணை நிற்கும்.
மக்களுக்கு ஒரு உறுதிமொழியை கொடுக்கிறேன். சிறு மற்றும் குறு தொழிலாளிகளை பாஜக ஒருபோதும் கைவிடாது. உங்களுக்கு என்ன தேவை உள்ளதோ, அதை தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவேற்றித் தரும். உங்களின் ஆலோசனையின் பேரில்தான் ஜிஎஸ்டி வரி விதிப்பை சில முறை நாங்கள் மாற்றி அமைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் எளிமைப்படுத்தி உள்ளோம்.
நெசவுத் தொழிலாளர்கள் நலிவடைந்து விடக்கூடாது என்பதற்காக ஜிஎஸ்டி வரி விதிப்பில் எவ்வளவு, உதவிகள் செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்துள்ளோம். இன்னும் உங்களுக்கு உதவி செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நெசவாளர்களுக்கு ரூ.7,000 கோடி அளவுக்கு மானிய உதவிகளை கொடுத்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. நதியை தூய்மைப்படுத்தவும், இணைக்கவும் புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளோம். நீரை முழுமையாக பயன்படுத்த ஒரு சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்படும். நதிகளை தூய்மைப்படுத்தவும், இணைக்கவும் முன்னுரிமை அளித்து செயல்படுகிறோம்.
காங்கிரசும், திமுகவும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திமுக ஒரு மோசமான கட்சி என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. திமுக தலைவர்கள் நம்முடைய அம்மா ஜெயலலிதாவை எவ்வளவு தரக்குறைவாகப் பேசினார்கள் என்பதை மறந்துவிட முடியாது. திமுக பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதாவை மோசமாக பேசி வருகிறார்கள். இந்த கட்சியா தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப் போகிறது என்று நம்புகிறீர்கள்? இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *