கோடை வெயில் சுட்டெரிப்பதால், கிருஷ்ணகிரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு விட்டன. இதனால், மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் தவிர்த்து, பிற அத்தியாவசிய தேவைகளுக்கு ஆழ்துளை கிணறுகளை நம்பியே உள்ளனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் இருந்தும், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சந்தைபேட்டை, லண்டன்பேட்டை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம், பழையபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகரில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தற்போது தண்ணீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நகரை சுற்றியுள்ள சின்னஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, புதூர் ஏரி, தேவசமுத்திரம் ஏரி ஆகிய 4 ஏரிகளில், தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு போயுள்ளன. தேவசமுத்திரம் ஏரியில் மட்டும் கழிவுநீர் கொஞ்சம் தேங்கியுள்ளது.
இந்த நான்கு ஏரிகளும் வறண்டு விட்டதால், நகரில் வசிப்பவர்கள் பிற பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை விரைவில் ஏற்படும். எனவே, இந்த ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு வர உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தண்ணீர் பிரச்னை தீரும். இல்லையென்றால் தண்ணீர் கேட்டு ஆங்காங்கே போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply