டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
12ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி, தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஷிகர் தவனும் பிரித்வி ஷாவும் முதல் விக்கெட்டுக்கு 4.3 ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் தீபக் சஹார் பந்து வீச்சில் பிரித்வி ஷா வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் சீரான இடைவெளியில் வெளியேற மறுபுறம் பொறுப்புடன் ஆடிக்கொண்டிருந்த தவன் அரை சதம் கடந்தார்.
அவர் 51 ரன்களில் வெளியேற, டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் டுவைன் பிராவோ மூன்று விக்கெட்டுகளையும், சஹார், ஜடேஜா, தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் பிராவோ வீழ்த்திய விக்கெட்டுகள் டெல்லி அணியைக் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த உதவியாக இருந்தது.
148 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் அம்பத்தி ராயுடு மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா பவுண்டரிகளை விளாசினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வாட்சன் 44 ரன்களில் வெளியேற, ரெய்னாவும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் கேதார் ஜாதவும் பொறுப்புடன் ஆடி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். தோனி 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தொடக்க வீரர் ஷேன் வாட்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Leave a Reply