தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வி.பி.கலைராஜனை நீக்கம் செய்வதாக டிடிவி தினகரன் நேற்று அறிவித்திருந்தார்.
விபி கலைராஜன் வகித்து வந்த பொறுப்புக்கு வி.சுகுமார் பாபு நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். இது தொடர்பாக டிடிவி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வி.பி.கலைராஜன் நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
வி.பி.கலைராஜன் அமமுக-வில் முக்கிய பிரமுகராக இருந்தார். மேலும் இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கியதால் திருச்சியில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த வி.பி.கலைராஜன் தம்மை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தினகரன் மீது அதிருப்தியில் பலரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் வந்து திமுக-வில் இணைவார்கள் என்றார். அமமுக உட்பட எந்த கட்சியையும் சவாலாகவோ, போட்டியாகவோ கருதவில்லை என்றார் ஸ்டாலின்.
நான் யாரையும் சவாலாக கருதவில்லை எனவும், மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே சவாலாக கருதுகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் அமமுக மட்டுமின்றி இன்னும் பல கட்சிகளில் இருந்து பலர் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.
Leave a Reply