பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ரகசியமாக புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. குற்றவாளிகள் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதால் அவர்களை கைது செய்யக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதையடுத்து வழக்கை பொள்ளாச்சி காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தனது விசாரணையை தொடங்கினர். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க பிரத்தியேக தொலைபேசி எண்ணை நேற்று சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர்.
மேலும், இவ்வழக்கு தொடர்பான படங்களோ மற்றும் வீடியோக்களோ தொலைபேசி எண்:94884 42993 மற்றும் cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கலாம். இவ்வழக்கு தொடர்பான விவரங்களையோ அல்லது வழக்கில் தொடர்புடைய எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்களோ தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினால் அவர்களது பெயர் மற்றும் விவரங்கள் வெளியில் வராமல் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த எண்ணை தொடர்புகொண்டு இதுவரை 112 பேர் புகார் தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் திரண்டதால், திருநாவுக்கரசு காணொலிக் காட்சி மூலம் கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். திருநாவுக்கரசரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான சபரிராஜன் இல்லத்திற்கு சென்ற போலீசார் அவனது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதேபோன்று கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் இல்லங்களுக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Leave a Reply