17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
தேர்தல் நடத்தை விதி முறைகள் பற்றிய விவரம்:
மக்களுக்கு எந்தவித நிதி உதவிகளையும் அளிப்பதாக அரசு அறிவிக்கக்கூடாது. அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை அள்ளி வீசக்கூடாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது.
அமைச்சரோ அல்லது அரசியல் நிர்வாகிகளோ எந்த திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டக்கூடாது. எந்தவித திட்டத்துக்காகவும் தொடக்க விழாக்களை நடத்தக்கூடாது. அரசு அல்லது அரசியல் கட்சிப் பணியாளர்கள் யாரும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கக்கூடாது.
அரசுப்பணி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் எந்தவித தற்காலிக அல்லது நிரந்தர பணி நியமனத்தை, பதவி உயர்வை அரசு அளிக்கக்கூடாது. அமைச்சர்கள் தங்கள் அலுவலக பயணத்தை தேர்தல் பணியோடு இணைக்கக்கூடாது.
அமைச்சர்கள் தேர்தல் பணிக்காக, அரசுக்கான அம்சங்களை பயன்படுத்தக்கூடாது. அரசு வாகனம், சுழல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.
சாதி, மதம் தொடர்பான உணர்ச்சியை தூண்டும் விதத்தில் செயல்படக்கூடாது. பிரசாரத்தில் குற்றச்சாட்டுகள் அனைத்துமே, அடுத்த கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், பழைய பதிவுகள், பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.
சாதி, மத உணர்வுகளை வாக்குக்காக பயன்படுத்தக்கூடாது. கோவில், மசூதி, தேவாலயங்களை அரசியல் பிரசார ஸ்தலமாக பயன்படுத்தக்கூடாது. அரசு பணத்தை செலவழித்து ஆளுங்கட்சியினர் விளம்பரம் செய்யக்கூடாது.
அரசு திட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பெயர், படம் இடம் பெறக்கூடாது. அப்படி இடம்பெறும் பெயர், படத்தை மறைக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெவ்வேறு தலைப்புகளில் இந்திய தேர்தல் ஆணையம் www.elections.tn.gov.in என்ற தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Leave a Reply