JSR கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு  சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரலாற்று பயணம் ஏற்பாடு

Share Button
J S R கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு  சார்பில் மகளிர் தினத்தை ஒட்டி கிருஷ்ணகிரி ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு ஒரு மாணவி + அம்மா + ஆசிரியை ஆக பள்ளிக்கு மூன்று பேர் வீதம் 60 நபர்கள்  வரலாற்று பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது .
இதற்கான பணிகளை வரலாற்று ஆய்வு மைய தலைவர் நாராயணமூர்த்தி, செயலர் டேவீஸ், பொருளாளர்  விஜயகுமார் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். திரு.கிருஷ்ணாஜி அவர்கள் மற்றும் அவரது துணைவியர் அவர்கள் மாணவிகளுக்கு பரிசளித்து அவர்களின் பயணத்தை துவக்கினர்.
முதல் பயணமாக வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் உள்ள நெடுசாலை ஊரின் சிவன் கோயில் பார்வையிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கோவில்கள் அதிகம் இல்லை. பிற்கால சோழர்கள் காலத்திய கோவில்கள் தான் இங்கு காணப்படுகிறது. அதில் ஒன்றுதான் நெடுசாலை நடராஜ சுவாமி திருக்கோயில். இங்கு பழைமையான செப்புபடிமங்கள் காணப்படுகின்றன.
25 வருடங்களுக்கு முன்னரே இங்கு கல்வெட்டுகள் படிஎடுக்கப்பட்டு படிக்கப்பட்டன. இப்பகுதி விரியூர் நாடு என அழைக்கப்பட்டது. பீமாண்டப்பள்ளி பகுதிவரை இரண்டாம் இராஜேந்திரன் பிற்கால குலோத்துங்கள் காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன. கூடுமுக்கி என இப்பகுதி அழைக்கப்பட்டு வருகிறது. கங்க மன்னன் காலத்திய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன என்று கிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாளர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் கூறினார்கள்.
புதுகோ.வெங்கடராமன் என்பவர் தான் இக்கல்வெட்டுக்களை படி எடுத்தவர். இவர் சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தின் முதல் காப்பாளர். இங்கு காணப்படும் செப்புப்படிமங்கள்  1936 ல் பூமியில் புதையலாக கிடைத்தது.
கல்வெட்டுகளில் கூடு முற்றத்தில்  கூத்தன் நெடுந்தேவன் என வருகிறது. கூடுமுக்கி என்பது மூன்று ஆறுகள் சேரும் இடம். எனவே கூடல்நகர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள கோவிலில்  குடிகொண்டிருப்பவர் ஆனந்த தாண்டவ நடராசர்.  இங்கு காணப்படும் சண்டிகேஷ்வர் திருமேனி தமிழகத்திலேய சிறப்பானதாகும்.
ஆட்சியாளர்கள் பொது மக்களிடம் என்னென்ன வரிகள் வசூல் செய்யப்பட்டது என்பதையும் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன  என்று தொல்லியல் ஆய்வாளர் திரு சுகவனமுருகன் அவர்கள் எடுத்துக்கூறினார். குந்தாணி ராஜ்ஜியத்தின் பிற்கால சோழர்கள் பின்னர் ஹொய்சாள மன்னர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை  இரண்டாக பிரித்து கொண்டு ஆண்டனர்.  இப்பகுதியை வீர இராமநாதன் என்பவர்  குந்ததாணியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துள்ளார்.
கிருஷ்ணகிரி பகுதியில், ஒரு நாட்டின் தலைநகராக  14 ஆண்டுகள்  இருந்தது இந்த இடம் மட்டும் தான். இக்கோவில் மன்னன் வீர ராமனாதனால்  கட்டப்பட்டதாகும். சிவன் கோவில், குந்தாணியம்மன் கோவில் இரண்டையும்  ஹொய்சாளர்கள் கட்டினாலும்,  ஒரு பகுதியிலும் ஹொய்சாளர்களின் கலைபாணியும் கிடையாது.  பிற்கால சோழர்களில் கலை பாணியிலேயே கட்டப்பட்டுள்ளது ஆகும்
இக்காலத்தில் அதிகம் போர்கள் நடந்து கொண்டிருந்ததால்  இங்கு நடுகற்களும் ஏராளமாக காணப்படுகின்றன. இங்குள்ள நடுகற்களில் வீரர்களின் பெயர், நடைபெற்ற போர், யார் மன்னன் போன்ற விவரங்கள் அக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
இதன் கலை நுணுக்கம் குறித்தும், அங்கு அமைந்திருந்த பிரம்மாண்டமான முறையில் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கும் ஆடல் அரங்கத்தையும், அவை எவ்வாறு எல்லாம் பயன்பட்டது என்பது குறித்தும்   மாணவியருக்கு  கிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் அவர்கள்  விளக்கி கூறினார்கள்.
இதனையடுத்து மகளிர் தினைத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சத்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு.பிரபாகர் அவர்கள் மாணவிகளுக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மகளிர்தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மாணவிகள் ஆட்சியரின் கூட்ட அரங்கத்தை பார்க்க கோரியதையடுத்து அவரோடி கூட்ட  அரங்கை பார்வையிட்டு, ஆட்சியரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
தொடர்ந்து கிருட்டினகிரி மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தை  பார்வையிட்டனர் .   அங்கு தபால் நிலைய அலுவலர் அவர்கள் தபால்நிலையத்தின் பணிகள் குறித்தும், தபால் நிலையத்தில் தபால்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்பது குறித்தும். பெண்குழந்தைகளுக்கான டெபாசிட் திட்டம் பற்றியும், விரைவுத்தபால்,  மணியார்டர் மாணவிகளின் போட்டோவை வைத்து ஸ்டாம்ப் (அஞ்சல்தலை) அச்சடிக்க பணம் செலுத்தினால்  யாருடைய புகைப்படத்தையும் அஞ்சல் தலையாக வெளியிடலாம் என்பதையும், தபால்நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைப்பற்றியும் அதன் பணிகள் பற்றியும் விரிவாக கூறினார்.
அடுத்த் நிகழ்வாக கிருட்டினகிரி அருங்காட்சியம் பார்வையிடப்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டுக்கள், நடுகற்கள், பழங்கால நாணயங்கள், பொருட்கள்,  சிற்பங்கள் குறித்த விரிவான விளக்கங்களை அருங்காட்சியக காப்பாளர் திரு. கோவிந்தராஜ் அவர்கள், திரு.சுகவனமுருகன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். முடிவில் கிருட்டினகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. மகேஷ்வரி அவர்கள் அனைவருக்கும் மகளிர் தினவாழ்த்தினை கூறி இனிப்பு வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணதேஜஸ், வள மைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தமிழ்ச்செல்வன், செல்வகுமார், பிரகாஷ், மதிவாணன், காவேரி, ரவி, மாருதி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *