2017-2018 ஆம் நிதியாண்டில் நாட்டில் உள்ள 37 மாநிலக்கட்சிகளின் வரவு செலவு அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சார்பில் (Association for Democratic Reforms) ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த 37 கட்சிகளின் மொத்த வருவாய் ரூ. 237.27 கோடி என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது. நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உள்ளது. அக்கட்சியின் வருவாய் ரூ. 47.19 கோடி, இது 37 கட்சிகளின் மொத்த வருவாயில் 19.89% ஆகும். திமுகவின் வருமானம் ரூ. 35.748 கோடியாகும். தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் வருமானம் ரூ. 27.27 கோடியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் உள்ளது.
மொத்தமுள்ள 48 மாநிலக்கட்சிகளில் 37 கட்சிகளின் தணிக்கை அறிக்கையை வைத்து தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 11 கட்சிகளின் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது அந்த அமைப்பு. கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், பங்களிப்புகள், உறுப்பினர் சேர்க்கை கட்டணம் உள்ளிட்ட நடவடிக்கை மூலம் பொதுவாக வருமானம் கிடைக்கிறது.
2017-18 நிதியாண்டுக்கான 37 கட்சிகளின் மொத்த செலவு ரூ.170.45 கோடியாக உள்ளது. சமாஜ்வாதிக் கட்சி ரூ. 34.539 கோடி செலவு செய்ததாகவும், திமுக 27.47 கோடியும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ. 16.73 செலவு செய்ததாகவும் ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது. சமாஜ்வாதி, திமுக, டிஆர்.எஸ், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 5 கட்சிகள் தங்கள் செலவுகளை விட அதிக வருமானத்தை கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Leave a Reply