காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பொதுகூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
முன்னதாக மேடையில் வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் அழகானது :
பின்னர் மோடி பேசியதாவது: நகரங்களில் தலைசிறந்தது காஞ்சிபுரம் என கவியரசர் காளிதாசர் பாடியுள்ளார். நமது உறவு வலிமையானது பிரிக்க முடியாதது. தமிழக மக்களும், கலாசாரமும் சிறப்பு மிக்கது. தமிழ் மிக அழகானது. வாரணாசி தொகுதி எம்.பி., காஞ்சிபுரம் வந்துள்ளேன். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பாடுபடுகிறது. ஜெயலலிதா கனவுகண்ட முன்னேற்ற பாதையில் செல்கிறோம். ரயில் திட்டம், நெடுஞ்சாலை திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன்.
எம்ஜிஆர் பெயர் :
தமிழக மக்களின் மரியாதைக்குரிய அடையாளமாக எம்ஜிஆர் திகழ்ந்தார். அவர், சினிமாவில் மட்டுமல்லாமல், மக்கள் மனதிலும் ஆட்சி செய்தார். ஏழை எளிய மக்களுக்காக திறமையாக செயல்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனி, எம்ஜிஆர் பெயரால் அழைக்கப்படும். தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களில், இனி அறிவிப்புகள் தமிழில் வெளியாகும்.
மத்திய அரசு உதவி :
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகருக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு. அங்குள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுடன் பேசி வந்துள்ளேன். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு சார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.
மத்திய ஆசிய நாடுகளில், தமிழர்கள் சிக்கிய போது, அவர்களை மீட்க மத்திய அரசு உதவி செய்தது. பாதிரியார் பிரேம், ஆப்கனில் சிக்கிய போது, 8 மாதங்களாக இரவு பகலாக உழைத்து, அவரை மத்திய அரசு மீட்டு கொண்டு வந்தது. விமானப்படை விமானி அபிநந்தன் எப்படி 2 நாட்களில் இங்கு மீட்டு கொண்டு வரப்பாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இலங்கையில் இருந்து 1900 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட மீனவர்களை கூட மீட்டு கொண்டு வந்துள்ளோம். சவுதி இளவரசருடன் பேசி, அங்கு சிறையில் உள்ள தமிழர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வருவாய் அதிகரிப்பு :
ஜவுளி துறையை முன்னேற்ற மத்திய அரசு உறுதி பூண்டது. 7 ஆயிரம் கோடி மானியமாக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. விசைத்தறியை மேம்படுத்த மத்திய அரசு உதவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரம் விசைத்தறிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரமும், தமிழகமும் சுற்றுலா துறையில் முக்கியமானவை. தே.ஜ., அரசானது சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. வெளிநாட்டு பயணிகள் வருகையால் ஒன்றரை மடங்கு வருவாய் அதிகரித்து உள்ளது. இ-விசா வழங்க, 66 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
நிறைவேற்றாது :
மத்திய அரசு பாதுகாப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டை ராணுவ தளவாட உற்பத்தி செய்யும் மையமாக மாற்றுவதே குறிக்கோள். தமிழகத்தில், ஒரு ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. இதனால், வேலைவாய்ப்பு, வளர்ச்சி அதிகரிக்கும். வலிமையான ராணுவத்தை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. இந்தியா பன்முகதன்மை கொண்டது. மாநிலங்களின் கோரிக்கைகள் நிறைவேறாமல், நாடு முன்னேறாது. நாட்டு மக்களே எங்களின் உச்சபட்ச கமாண்டர்.
நாங்கள் டில்லியில் முடிவெடுப்பது இல்லை. மாநிலங்களின் ஆசைகளை காங்கிரஸ் நிறைவேற்றாது. காங்கிரசை ஆதரித்தால் டில்லியில் ஏசி அறையில் முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும், தமிழக கிராமங்கள் முடிவெடுக்கும் சூழ்நிலையை உருவாக்காது.
காமராஜருக்கு அவமானம் :
வலிமையான மாநில தலைவரை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. காமராஜரை காங்கிரஸ் அவமானப்படுத்தியதை மக்கள் அறிவார்கள். மக்களுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் அவர் குரல் கொடுத்ததாலும், ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்ததாலும் அவர் அவமானப்படுத்தப்பட்டார்.
சந்தர்ப்பவாத அரசியல் :
மாநில அரசுகளை கலைக்கும் பழக்கம் காங்கிரசுக்கு உண்டு. அரசியல் சட்டப்பிரிவு 356 மூலம் பயன்படுத்தி அதிகளவு மாநில அரசை காங்கிரஸ் டிஸ்மிஸ செய்தது. மாநில தலைமை பிடிக்கவில்லை என்றால், மாநில அரசை காங்கிரஸ் மேலிடம் கலைத்துவிடும். 356 சட்டப்பிரிவை 100க்கு மேற்பட்ட முறை பயன்படுத்தியது. இந்திராவால் மட்டும் 50 சதவீதம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு திமுகவும் பலியாகியுள்ளது. ஆனால், தற்போது கொள்கைகளை விட சந்தர்ப்பவாத அரசியல் திமுகவிற்கு முக்கியமாகிவிட்டது.
பயப்பட மாட்டேன் :
மோடி எதிர்ப்பு எல்லை தாண்டி செல்கிறது. யார் அதிகமாக மோடியை வசைபாட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி உள்ளது. சிலர், என்னையையும், எனது ஏழ்மையையும், குடும்பத்தையும், நான் சார்ந்துள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாய பின்னணியையும் வசைபாடுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை கொலை செய்ய வேண்டும் என சொல்கிறார். மிரட்டல், வசைபாடுதலை கண்டு நான் பயப்பட மாட்டேன். மக்களுக்காக உழைக்க விரும்புகிறோம். எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும், எனது மூச்சு காற்றும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், 130 கோடி மக்களுக்காக செலவழிக்க விரும்புகிறேன்.
சமரசம் இருக்காது :
ஜனநாயகத்தில் சரியான கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது. குறிக்கோள் இல்லாத கலப்பட கூட்டணியிடம், உங்களின் நோக்கம் செயல்திட்டம், குறித்து தமிழக மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் நாட்டை முன்னேற்றவதற்காக கூடவில்லை. மோடியை தடுக்கவே கூடியுள்ளனர்.
தேஜ அரசின் செயல்பாடு அனைவருக்கும் தெரியும். ஏழை மக்களின் நலனில் உறுதியாக உள்ளோம் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த செயல்படுகிறோம் விவசாயிகள் நலனுக்கு திட்டமிட்டு செயலாற்றுகிறோம். ஊழலை அகற்றுவதில், சமரசம் செய்யாமல் செயல்படுகிறோம். தேசிய பாதுகாப்பில் வலிமையை காட்டுகிறோம். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் சமரசம் இருக்காது.
நாடே முதன்மையானது. மக்கள் முதன்மையானவர்கள். அதிக திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மக்கள் ஆசிர்வாதத்தோடு,வரும் காலத்தில் நிறைய செய்ய காத்திருக்கிறோம். தமிழகத்தில் சகோதர சகோதரிகளிடம் பா.ஜ., கூட்டணிக்கு ஆசி வழங்க வேண்டும் என கேட்கிறேன். நாளை நமதே நாற்பதும் நமதே. இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply