பாகிஸ்தானின் பிடியில் இருந்து இந்தியா திரும்பிய அபிநந்தன்: எல்லையில் ஆரவார வரவேற்பு!
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இன்று மாலை வாகா எல்லை மூலம் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அவரை எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை விரட்டிச் சென்ற போது இந்திய விமானி அபினந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். இதையடுத்து இருநாடுகளிடையே போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதனையடுத்து இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக அபினந்தனை வரவேற்க அவரது பெற்றோர் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் அபினந்தன் இன்று பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரை பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து அதிகாலை முதல் வாகா எல்லையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அபினந்தனைக் கண்டதும் கரகோஷம் எழுப்பினர். மேலும் போட்டி போட்டுக் கொண்டு தாங்கள் வைத்திருந்த பூக்களையும், பூங்கொத்துக்களையும் போட்டி போட்டுக் கொண்டு அபிநந்தனிடம் வழங்கினர். தொடர்ந்து அபிநந்தனைக் கண்டதும் அவரது பெற்றோர் ஆனந்தக் கண்ணீருடன் ஆரத்தழுவி அவரை வரவேற்றனர்.
Leave a Reply