கழியட்டும் கர்மவினை! கர்மவினையால் அவதியுறும் ஒருவன் சத்சங்கத்தால் கர்மவினை ஓய்ந்து செயல் இழந்து நலம் பெறுகின்றான்

Share Button

கர்மவினையால் அவதியுறும் ஒருவன் சத்சங்கத்தால் கர்மவினை ஓய்ந்து செயல் இழந்து நலம் பெறுகின்றான்.

திருவண்ணாமலையில் பவழக்குன்று போகும் வழியில், ஒரு சிறிய மேடை உள்ளது. அதில் ஒருவர் எப்பொழுதும் தவயோகத்தில் இருப்பார். ஒரு ஜமீன்தார் முற்பிறவியின் கர்மவினையால் தீராத வயிற்றுவலியால் துன்பப்பட்டு எவ்வளவு பணம் செலவிட்டும் பலனில்லாமல் விரக்தியுடன் இருந்தான்.

கடைசியாக, சிலர் சொல்லக் கேட்டு, இந்த யோகியிடம் விளக்கினான். யோகியோ எதுவும் பேசாமல், ஒரு
சுருட்டைப் பற்றவைத்து அதன் புகையை ஜமீன்தார் முகத்தில் விட்டார், ஸ்வாமியின் / யோகியின் செய்கை விசித்திரமாக இருந்தது, சிலர் ஆச்சர்யமடைந்தார்கள்.

சிறிதுநேரத்தில் அந்த ஜமீன்தாருக்கு வயிற்றுவலி நீங்கியது. வாழ்நாளில் அவருக்கு மீண்டும் அந்த வயிற்றுவலி வரவேயில்லை. இன்றும் தாய்மார்கள் கையில் குழந்தையுடன் மசூதியின் முன்பு அதிகாலையில் நிற்பார்கள்.

முகமதிய அன்பர்கள் இறைவனின் தொழுகையை முடித்துவிட்டு வரும்போது, குழந்தைகளின்மேல் வாயினால் முகத்தில் ஊதச் சொல்வார்கள். குழந்தை நலமடைவதை இன்றும் காணலாம். இது சத்சங்கத்தின் விளைவே.

ஜமீன்தார் ஸ்வாமிக்கு / யோகிக்கு பரிசளிக்க விரும்பினார், அவரோ, இங்கு இருக்கும் விருப்பாட்சீஸ்வருக்கு ஒரு கோயில் கட்டுமாறு பணித்தார். அந்தக் கோயிலுக்கு ஒருகால பூஜை இன்றும் நடைபெற்று வருகிறது. சத்சங்கத்தின் மகிமை இது.

திருவண்ணாமலையில் ஈசான்ய தேசிகர் வாழ்ந்த காலத்தில், வெள்ளைக்காரதுரை, கலெக்டர், ஸ்வாமியின் பரமபக்தர் ஆவார். ஏனெனில் அவருடைய காசநோய் மருந்தில்லாமல், சிகிச்சை இல்லாமல் குணமானது. கலெக்டர் திருக்கோவிலூரில் தங்கி இருந்தார்.

தென்பெண்ணை ஆறு பாலமில்லாமல் இருந்தது. ஒருமுறை ஸ்வாமியைப் பார்க்க குதிரையுடன் வெள்ளத்தில் இறங்கிவிட்டார். இங்கு திருவண்ணாமலையில், ஸ்வாமிகள் திடீரென்று எழுந்து தன் இருகைகளையும் உயர்த்தி சிறிதுநேரம் பிரார்த்தித்து கையை இறக்கிவிட்டார்.

மற்றவர்கள் காரணம் கேட்க, என் பக்தன் ஒருவன் ஆற்றில் இறங்கிவிட்டான், அவனுக்கு எதுவும் நேராமல் அவனைக் காப்பாற்றினேன் என்றார். ஒருமணிநேரம் சென்றது, துரை ஈரத்தில் நனைந்த உடையுடன் அவரிடம் வந்து நமஸ்கரித்தார். உண்மையைக் கேட்டறிந்தார்.

பால்பிரண்டன் எனும் அமெரிக்கப் பிரஜை ரமணமகரிஷியை அணுகியதால், சத்சங்கத்தால் அருள்பெற்று ”A Search in Secret India” எனும் நூலை வெளியிட்டார்.

அதனால் ஏராளமான அமெரிக்கர்கள் ரமணாஸ்ரமத்திற்கு வருகை புரிந்தனர். சத்சங்கத்தின் பெருமை
அளவிட இயலாதது. நாமும் முயற்சியில் ஈடுபட்டு முக்தியடைவோமாக.

 

 

ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள்
காஞ்சிபுரம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *