காலம் காட்டும் கனிவு – சத்சங்கம்
எனக்கோ வயதாகிவிட்டது, காலமெல்லாம் செல்வத்தை ஈட்டுவதிலும், எம்முறையிலேனும் பெருகவிட்டு செய்வதிலேயே என் காலம் கழிந்துவிட்டது.
கீதையையோ, திவ்யப்ரபந்தங்களையோ, திருமுறைகளையோ படிக்க முடியவில்லை, படித்தாலும் மனத்தில் பதிவதில்லை. இந்நிலையில் இருப்பவர்கட்கு சத்சங்கம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மீண்டும் விவரிக்கிறேன்… தவசிரேஷ்டர்களையோ, மகான்களையோ, ஆச்சார்யர்களையோ, சமயக்குறவர்களையோ, ஞானிகளையோ தீவினையால் சூழப்பட்ட ஒருவன் அணுகும்போது, அவ்வினை செயலிழந்து விடுகின்றது.
அழிந்தும் விடுகின்றது, கடைசியில் முக்தியும் கிடைக்கிறது. ஒரு கதையிலிருந்து துவங்கலாம்….
நாரதமுனிவர், முற்பிறவியில் மடத்தில் வேலைக்கார பெண்மணியின் மகன். மடத்தில் சாதுர்மாஸ்ய விரத்திற்காக பரிவ்ராஜ கசடுக்கள் நான்குமாதம் நிலையாக ஓர் இடத்தில் தங்கி பூஜை, புனஸ்கரங்களை அனுஷ்டிப்பார்கள்.
வேலையாளியின் மகன், அவர்கட்கு சிறிதும் பிழை இல்லாமல் சேவை செய்து பாராட்டுதலும், உபதேசமும் பெற்று ரிஷிகேஷில் தவமியற்றி மறுபிறவியில், நாரதராக வரும் பெரும் பேற்றினை எய்தினார். ஈஸ்வரனால் மகர்தி எனும் 1000 தந்திகளையுடைய வீணையையும் கிடைக்கப் பெற்றார். இதுவே சத்துக்களின் சத்சங்கப் பலனாகும்.
வால்மீகி முனிவர், இளமையில் பால்யா என்றழைக்கப்பட்ட வேடன். கொலையும் கொள்ளையும் சர்வ சாதாரணம். அந்த தீவினையாளன்கூட நாரதர் போன்ற சப்தரிஷிகள் இணக்கத்தால் சத்சங்கத்தால் தவசேஷ்டராகி இராமாயணம் நடைபெறும் முன்னரே அவர் வரலாற்றை இயற்றும் ஆற்றல் எய்தினார்.\
சமீபகால நிகழ்ச்சியைக் காண்போம். கிருஷ்ணதேவராயர் ஹம்பியில் செங்கோல் ஓச்சிய காலம் அது. முகமதியர் படையெடுப்பை தன் தளபதி அர்ச்சுதராயரைக் கொண்டு முறியடித்தார். ஹம்பிநகரம் இன்றும் உள்ளது. மேலும் விரிவாக்கப் பார்ப்போம்.
அவர் ஆட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூரில், ஒரு பெரிய மஹான் ஒருமுறை விஜயம் செய்தார். அவரைக் காணவும், ஆசிபெறவும், திரளான மக்கள் குழுமியிருந்தனர். அவ்வூரில் ஒரு ஏழைப்பெண் இருந்தாள், அவளின் கணவர் அன்று மரணமடைந்திருந்தார். மேலும், பிள்ளைப்பேறு கிடையாது. கணவனை அடக்கம் செய்ய மகானிடம் உதவி கேட்கலாம் என்று அவளும் சென்றிருந்தாள். கூட்டமாக இருந்ததால் வரிசையில் நின்றாள், அவள்முறை வந்ததும், அந்த மஹான் ”தீர்க்க சுமங்கலி பவ” என்று ஆசி செய்தார்.
அந்தப் பெண் தன் நிலையைச் சொல்ல முற்பட்டபோது, பேசவிடாமல் வெளியில் தள்ளப்பட்டார். மனம் உடைந்த நிலையில், வேறு யாரையாவது உதவி கேட்கலாம் என்று வீடு திரும்பிய பெண்மணி திடுக்கிட்டார். காரணம், மகானின் வாக்கு பலித்து, கணவன் மீண்டும் எழுந்து உட்கார்ந்து இருந்தான்.
சிறிதுகாலத்தில், அவர்களுக்கு மகப்பேறும் கிடைத்தது. அவர்கள் மகன்தான் வியாசராஜன். இவ்விடம், ஒரு நிகழ்ச்சியை விளக்க அவா கொள்கிறேன். சத்சங்கத்தால் விதி தன் வலிமையை, தன் செயலை இழந்துவிடுகின்றது. பெற்றோர்கள் ஆசியுடன் சிறுவயதிலேயே வியாசராஜன் தவம் செய்ய ஒரு மலைக்குன்றுக்குச் சென்றுவிட்டார்.
அந்த இடம் கிருஷ்ணதேவராயருக்குச் சொந்தமானது. தினமும், கிருஷ்ணதேவராயர்தன் ஆட்சியில் அரியணை ஏறும்போது ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைப்படிதான் அரியணையில் அமர்வார்.
ஒருமுறை அவர், அரசனையில் ஏற முற்பட்டபோது ஜோதிடர்கள், யாகத்தின் மூலம் உருவாகிய ஒரு பெரிய தீயசக்தி அரியணையில் அமர்பவரைக் கொன்றுவிடும் எனக் கண்டறிந்தனர்.
இது தோல்வியுற்ற பகைவர்களின் சூழ்ச்சி என்பதும் தெரியவந்தது. கிருஷ்ணதேவராயர் அரியணையில் அமரமுடியாத சூழ்நிலை நிலவியது. அரியணை காலியாக இருக்ககூடாது என்பதனால், அக்கால மரபுப்படி, யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து பட்டத்துக்கான நபரைத் தேர்ந்தெடுக்க அனுப்பினர். யானையும் பல இடங்களில் தீட்டி அலைந்து இறுதியில், குகையில் தவத்தில் இருந்த வியாசராஜர் கழுத்தில் மாலையைச் சூட்டியது.
தவம் கலைந்த முனிவர் முதலில் சற்று கோவமடைந்தாலும், நாட்டுக்கு வரும் அபாயத்தை ஞானத்தில் உணர்ந்து, மந்திரி பிரதானிகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு நிபந்தனையின் மூலம் சம்மதித்தார். அதன்படி, நாட்டுக்கு அபாயம் நீங்கியவுடன் தன்னை இராஜ்யத்திலிருந்து விடுவித்து விடவேண்டும் என்பதே.
அனைவரும் மகிழ்வுடன் சம்மதிக்க, அரியணையில் வியாசராஜரும், அரசகாரியங்களை கிருஷ்ணதேவராயரும் கவனித்து வந்தனர். ஒருமுறை, அரியணையில் அமர்ந்திருந்த வியாசராஜர் திடீரென எழுந்து நின்று தன்மேலுள்ள உத்திரியத்தை எடுத்து ஆகாயத்தில் வீசி எறிந்தார். வஸ்திரம் தீப்பற்றி எரிந்தது.
வியாசராஜர் கிருஷ்ணதேவராயரைப் பார்த்து, அரசே, தீயசக்தியை தவப்பயனால் அழித்துவிட்டேன், இனி பகைவர்களால் உமக்கு தொல்லையில்லை, நான் விடைபெறுகிறேன் என்று மீண்டும் தவம் செய்ய சென்றுவிட்டார். அவருக்கு எட்டு சீடர்கள் உண்டு. அவர்கள் மறைந்து சமாதிநிலையை அடைந்து அந்த இடம் நவபிருந்தாவனம் என்றபெயரில் பக்தர்கட்கு அருள்பாலிக்கும் இடமாக இன்றும் விளங்குகிறது.
இதனால் நாம் அறிவது, சாதுக்களின் ஆசியால் இறந்த கணவன் உயிர் பெற்று மீண்டான், புத்திரபேரும் கிட்டியது. கிருஷ்ணதேவராயரின் அழிவும், ராஜ்யசீர்குலைவும் வியாசராஜரால் காப்பாற்றப்பட்டது. சத்சங்கத்தின் விளைவுகள் என்பது இதுவே.
ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள்
காஞ்சிபுரம்
Leave a Reply