தற்போது அதிகமாக நடைபெறும் பாலியல் வன்முறை குறித்து உங்கள் கருத்து என்ன?

Share Button

கேள்வி: தற்போது அதிகமாக நடைபெறும் பாலியல் வன்முறை குறித்து உங்கள் கருத்து என்ன?

 

 

 

 

 

  • வி. ராஜேந்திரன், கோடம்பாக்கம்

பதில்: வக்கிர எண்ணங்கள், பாலியல் கல்வி குறைபாடு, பாலியல் தொடர்பான கருத்துப் பகிர்வு குறைவு,
பெண்களின் உடை இவற்றையெல்லாம் ஒரு காரணமாகச் சொன்னாலும் இவற்றிற்கெல்லாம் மேல் ஒரு விஷயம் உள்ளது.

 

 

 

 

 

  • ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்

அது ஆணவம் எனும் கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷம். பொதுவாக ஆணுக்கு அடக்குமுறை ஆணவ
மனோபாவமும், பெண்ணுக்கு எதிர்க்கும் ஆணவ மனோபாவமும் அதிகரித்து உள்ளதே இதன் அடிப்படைக்
காரணமாகும். இதனைச் சற்று ஆராயலாம். காலம் காலமாக பெண் தன்னைச் சார்ந்திருந்தத் தன்மையை உள்வாங்கிய விஷயம் ஆணின் மரபணுவில் மறைந்திருக்கிறது.

அதேபோல் பெண் எவ்வளவுதான் சமூகத்தில் மேன்மை அடைந்திருந்தாலும் கற்பு, அதன்மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை போன்றவைகள் அவர்களின் மரபணுவில் ஆழமாக மறைந்துள்ளன. இருவருக்குள்ளிருந்தும் அவர்களின் மரபணுவில் உறைந்துள்ள விஷயங்களை அவ்வளவு எளிதாகத் துடைத்துவிட முடியாது. குடும்ப அமைப்பில், சமூக வரைமுறையில், உடல் வடிவமைப்பில் ஆணும்
பெண்ணும் ஒப்பிடமுடியாத தனித்தன்மை வாய்ந்தவர்கள் எனும் உண்மை புரியாமல் இருப்பதே இந்த ஒப்பிடுதலுக்கும் அதன் விளைவாக எழும் இந்த ஆணவத்திற்கும் அடிப்படை ஆகும்.

நீயா நானா எனும் ஒப்பீடே இது. எதிர்ப்பு வரும் இடத்தில் “எது அவர்களின் பலவீனம்” என்று ஆராயும் தன்மை மிக இயல்பாக வரும். “எனக்கு நீ சமமா?” எனும் ஆணின் ஆணவ எண்ணமே பலவழிகளில் பெண்ணை முயற்சிசெய்து தோற்கடிக்க நினைக்கிறது.

அனைத்து வழிகளிலும் தனக்கு எதிராக நின்று பெண் சவால் செய்யும்போது, “எதைச் செய்தால் அவமானம் தாங்காமல் கூனி குறுகிப் போவாள்” என்று ஆண் ஆணவ மனம் கணக்குப் போடுகிறது. அதன் இறுதியாக உடலையும் தாண்டி மரபணுவில் கலந்திருக்கும் தன்மையை சீண்டும் விஷயம் அரங்கேறுகிறது.
அதனை சூழ்நிலையின்போது எதிர்க்கவும் முடியாது, பின்பு எதிர்த்துதான் ஆகவேண்டும் எனும் முரண்பாட்டுச் சிக்கலில் தவித்து பின்பு பெண் ஆணவ மனம் கணக்குப் போடுகிறது.

“உன்னால் என்னை இதுதானே செய்யமுடியும்? வெற்று வார்த்தைகளால் உன்னைச் சீண்டி, உன் இயலாமையை உனக்குக் காட்டி உன்னைத் திணறடிக்கிறேன் பார்” என்று பெண் ஆணவ மனம் தீவிரம் காட்டுகிறது. இது ஒரு தொடர் வட்டமாகி மீண்டும் மீண்டும் அனைத்தும் அரங்கேறுகிறது.

ஒரு கட்டத்தில் பார்க்கும் அனைத்துப் பெண்களையுமே (குழந்தைகள் உட்பட) அடக்கியாளும் ஆணவ
மனோபாவம் ஆணுக்கும், பார்க்கும் அனைத்து ஆண்களையுமே அவமானப்படுத்த வேண்டும் ஆணவ மனோபாவம் பெண்ணிற்கும் உருவாகிறது.

ஒப்பிடுவதே அறியாமை. அதுவும் ஒரு ஆணை மற்றொரு ஆணுடன் ஒப்பிடாலும் ஏதேனும் வரைமுறை
இருக்கிறது. ஆணும் பெண்ணும் அனைத்திலும் வெவ்வேறு தளத்தில் அமையப்பெற்றவர்கள். ஒப்பிடமுடியாதவர்கள். தனித்தன்மை வாய்ந்தவர்கள். இதனை இருபாலருமே புரிந்துகொள்ளும்போது ஏதேனும் ஒரு சுமூக சூழ்நிலை வரும் வாய்ப்புண்டு. இருப்பினும் நூறு சதவிகிதம் மாறுவதற்கான வாய்ப்பு என்பது கேள்விக் குறிதான்.

பாலியல் வன்முறைக்கு அடிப்படையாக பல சொல்லப்பட்டாலும் பொதுவான காரணமாக கண்ணுக்குத்
தெரியாத ஆணவமே பின்புலனாக இருக்கிறது. பெண்ணை வெற்றிகொள்வதில் ஆண் எப்போதுமே மகிழ்ச்சி
கொள்கிறான். வெற்றிகொள்வது என்பது அவள்மேல் அன்பு காட்டும்போது, காமத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தன்னைவிட அவளை தாழ்த்தி சுட்டிக்காட்டும்போது, தனது பேச்சில் மயக்கும்போது, தனது பணத்தின் மதிப்பை பிரமிப்பாய் பார்க்கவைக்கும்போது இன்னும் பலவழிகளில் பெண்ணின் தோல்வியை/தனது வெற்றியை பெண்ணை தனக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கும்போது ஆண் மகிழ்ச்சியடைகிறான்.

அதேபோல் பாலியல் வன்முறையிலும் தன்னை மீறும்/எதிர்க்கும்/வேகம் காட்டும் பெண்ணை அடக்கியாள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறான். பாலியல் வன்முறை உடல் தூண்டுதலினால் மட்டும் நிகழ்வதல்ல. தனது ஆணவத்தை சரியாகக் கையாளத்தெரியாத காரணத்தினாலும் நிகழ்கிறது.

ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் அவரவர்களின் சகஜ நிலையில், அவரவர்களின் இயல்பில்,
மனச் சங்கடங்கள் இல்லாது, காழ்ப்புணர்ச்சி இல்லாது, ஒப்பீடு இல்லாது, அடக்குமுறை மனோபாவம் இல்லாது, காமம் என்பது உடையால் மறைத்து வைக்கப்பட்டுள்ள உடல் அங்கம் மட்டுமே அல்ல என்பதனை புரிந்துகொண்டு, ஆணவ மனோபாவம் தேவையில்லாதது என்பதனை உணர்ந்து வாழ நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.  நமக்கு நாமே வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்வோம். வாழ்த்துக்கள்.

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *