அர்த்தமுள்ள வாழ்க்கை முறை : மற்றுமொரு ”புதிய தொடர்” ஓர் அறிமுகம் Episode-1
‘வாழ்க்கையே ஒரே போராட்டமா இருக்குப்பா’,
‘இந்த மனுஷங்க ஏன்தான் இப்படி இருக்காங்கனே தெரியல’,
‘என்னமோ போகுதுப்பா…எங்கபோய் முடியும்னு தெரியல’,
‘துரோகம் எனக்குப் பழகிப் போச்சு’,
போன்ற எண்ணற்ற சலிப்புகள், வேதனைகள், ஆற்றாமைகள், குழப்பங்கள், தேற்றல்கள், சிந்தனைகள் என்று பெரும்பாலானோர் தன்னுடைய வாழ்வின் போக்கு குறித்தும், உடன் இருக்கும் மனிதர்கள் குறித்தும், தன் சூழ்நிலைகள் குறித்தும், தன் விதியைக் குறித்தும், தன் இயலாமையைக் குறித்தும் பல்வேறு விதமான கண்டனங்களை மனதில் சுமந்தபடி வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
ஒரு எழுத்தாளனாக, மனநல ஆர்வலராக பலபேரை உணரும் சூழ்நிலையில் உடன் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஒரு பகிர்தல் தேவைப்படுகிறது என்பதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தப் பகிர்தல் யதார்த்தத்தைப் புரியவைக்கும்படியும், நடைமுறையை எடுத்துரைக்கும்படியும் இருந்தால் நலமாக இருக்கும் என்று ஒரு உணர்வு எழுந்தது.
சமூகத்தில் ஒரு அங்கமாக இருப்பவர்கள், தங்கள் குழந்தைகளை சிறப்பாக, ஆரோக்கியமாக, வளமாக வாழவைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் தங்களை முதலில் சீர்படுத்திக் கொள்வது அவசியம் அல்லவா? தன்னுடைய சூழ்நிலையை, குழப்பத்தை, வேதனையை, சலிப்புகளை கையாளுவதே சிரமமாக இருக்கும்போது தங்கள் குழந்தைகளுக்கு எவ்விதத்தில் உதவமுடியும் என்றொரு கேள்வி எழுந்தது.
அப்பொழுது உதித்த எண்ணமே இந்த வாழ்வியல் பகிர்வு. தன்னை உற்றுப் பார்த்து மேலும் பலபேரின் வாழ்வைப் பார்த்து, பகிர்ந்து, உற்றுநோக்குதல் மூலம் ஏற்படும் ஓர் உந்துதலே இந்தப் பதிவு. பலபேரின் கேள்விகளுக்கு பதிலாக, நடைமுறை சூழ்நிலைக் கட்டுரையாக, வாழ்க்கை ஆராய்வுக் கட்டுரையாக, பலபேரின் அனுபவப் பகிர்தலாக இந்தப் பகிர்வு அமையும்.
நம் அனைவருக்கும் நடப்பவைகளை நல்லவைகளாக எடுத்துக்கொள்ளும் தன்மை அமையட்டும்.
நல்லது நடக்கட்டும்.
***************************************************************************************************************************************
ஒரு வாசகரின் கேள்வி…
கேள்வி : “விதி வலியது” என்பதனைப் பற்றி வேறொரு கட்டுரையில் சொன்னீர்கள். “விதியை மதியால்
வெல்லலாம்” என்பதனைப் பற்றி சொல்லமுடியுமா??
– லியோ ராபர்ட்சன், கொல்கத்தா
பதில்: விதிக்கப்பட்டது என்பதன் சுருக்கமே விதி என்பதும் அதனை விளக்கும் சில கருத்துகளையும் ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். ‘விதியை மதியால் வெல்லலாம்’ எனும் கூற்றைப் பற்றி இப்போது கேட்கிறீர்கள்.
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இரவு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை நாங்கள் குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பது வழக்கம். அவ்வாறு ஒருமுறை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒளிபரப்படும் பாடல்களுக்கு நடுவே பெண்கள் பயன்படுத்தும் நாப்கினைப் பற்றிய ஒரு விளம்பரம் ஒளிபரப்பானது.
அது என்னவென்று தெரியாத காரணத்தினால் என் அப்பாவிடம் அது என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், ‘உனக்கு விரலில் அடிபடும்போது அந்தப் புண்ணை ஆற்றுவதற்கும், இரத்தம் வெளியாவதைத் தடுப்பதற்கும் பிளாஸ்திரி (bandaid) போட்டுக் கொள்கிறாய் அல்லவா? அதேமாதிரி இது பெரிய bandaid. அவ்வளவுதான்’ என்றார்.
சில உண்மையான விஷயங்களை சொல்வதற்கும் அதனைக் கேட்டுக் கொள்வதற்கும் ஒரு குறிப்பிட்ட வயது, அனுபவம், புரிதல் ஆகியவைகள் அவ்விஷயத்தை சொல்பவருக்கும், அதனை கேட்டுக்கொள்பவருக்கும் வேண்டும். மேலே சொன்ன என் அப்பாவின் பதில் ஓரளவுக்கு உண்மையென்றாலும் முழுவதும் என் கேள்விக்குண்டான பதில் அல்ல.
ஏனென்றால், அப்பொழுது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனக்கு அந்த கேள்விக்குண்டான பதிலைப் பெறுவதற்கு முன்பு பெண்களின் அடிப்படை உடற்கூறு பற்றி தெரிந்திருக்கவேண்டும். அவர் சொல்லும் உண்மையான பதிலை விரச கற்பனை இல்லாமல், கூச்சம் இல்லாமல் கேட்டுக்கொள்ளும் புத்தி எனக்கு வேண்டும்.
இவ்வகையான தகுதிகள் அந்த வயதில் எனக்கு இருந்திருக்க வாய்ப்பு இல்லையென்பதால் சூழ்நிலைக்கு இணையான அதேசமயம் என்னைத் திருப்திபடுத்தும் பதிலை எனக்கு அளித்தார். இதுவே யதார்த்தம். விதியைப் பற்றிய விளக்கம் அளிக்க அல்லது பெற ஒரு குறிப்பிட்ட வயது, அனுபவம், புரிதல் இருக்க வேண்டும்.
நீங்கள் நாற்பது வயதைக் கடக்கும்போதுதான் வாழ்வின் யதார்த்தம் புரியும். அதற்குப் பிறகே வாழ்வின் சூட்சுமங்களைப் பற்றிய புரிதல் வரும். ஆனால் இவ்வகையான சூட்சும விஷயங்களை சிறிய, பருவ,
துடிப்பான வயதில் இருக்கும் வயதினருக்கு புரியவைப்பது கடினமான விஷயம்தான்.
அதனால்தான் விதியின் உண்மை நிலையைப் பற்றி சொல்வதற்கு பதிலாக அவர்களை ஊக்குவிக்கும்
தோரணையில், நோக்கில், தளத்தில் ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்று சொல்லியிருக்கலாம். பருவ வயதில் விதியைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிப்பது தவறான புரிதலை ஊக்குவிக்கும் முறையாக இருக்க வாய்ப்புண்டு என்றுகூட இவ்வாறு சொல்லியிருக்கலாம்.
வாழ்வில் புத்தி கூர்மை அவசியம் என்பதனை வலியுறுத்திகூட இவ்வாறு சொல்லிருக்கலாம்.
ஒரே விஷயத்தை நமது சிறிய வயதில் புரிந்து கொள்வதற்கும் பக்குவ வயதில் புரிந்து கொள்வதற்கும் உள்ள வேறுபாடே இந்த இரு கூற்றுகள். புரிந்துகொள்ளும் திறமையை விதைப்போம். வாழ்த்துக்கள்.
தொடரும்…
…………………………………………………………………………………………………………………………………………….
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply