பிள்ளைகளை அடிக்கக் கூடாது, பயமுறுத்தக் கூடாது, எவ்விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளுடன் என் மாணவர்களுக்கு எப்படி நான் கற்றுக்கொடுப்பது? மாணவர்கள் நான் சொல்வதைக் கேட்பதாகவேத் தெரியவில்லையே!?

Share Button

கேள்வி : பிள்ளைகளை அடிக்கக் கூடாது, பயமுறுத்தக் கூடாது, எவ்விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளுடன் என் மாணவர்களுக்கு எப்படி நான் கற்றுக்கொடுப்பது? மாணவர்கள் நான் சொல்வதைக் கேட்பதாகவேத் தெரியவில்லையே!?

 

 

 

 

 

  • எல். லில்லி, ஆசிரியர்

பதில் : இது எப்படிக் கற்றுக் கொடுப்பது என்பதற்கான கேள்வி இல்லை. உங்கள் பேச்சிற்கு மாணவர்களிடத்தில் மரியாதை இல்லையே என்பதற்கான கேள்வி. நீங்கள் எதனைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அது அவர்களுக்குத் தேவையில்லாததாகத் தெரிகிறது.

 

 

 

 

 

  • ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்

எப்படிச் சொன்னால் அவர்களைச் சென்றடையும் என்கிற வித்தை உங்களுக்குத் தெரியவில்லை என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளும்போது உங்களின் பேச்சை கவனிப்பதில்லை. இது மிக எளிமையான விஷயம். மேலும் தன்னைப் பார்த்து மற்றவர்கள் பயப்படவேண்டும் என்பது ஒருவகையான போதை தரும் விஷயமும் கூட.

மாணவர்களுக்குத் தேவையானதை அவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளும் நிலையில் அவர்களை எதற்கு அடிக்க வேண்டும், அவர்கள் உங்களைப் பார்த்து எதற்கு பயப்பட வேண்டும், நீங்கள் எதனை அவர்களுக்கு அழுத்தமாகக் கற்றுக் கொடுக்கப் போகிறீர்கள்? கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் மிக இயல்பாக நடக்க வேண்டும்.

பொதுவாக, மாணவர்களுக்கு என்ன வேண்டுமோ அது கற்றுக்கொடுக்கப் படுவதில்லை… மாறாக ஆசிரியர்களுக்கு என்ன தெரியுமோ அதுவே கற்றுக் கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு கார் ஓட்டத் தெரிந்திருக்கலாம்… ஆனால் மாணவர்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்க வந்து இருக்கிறீர்கள் என்பதனை மறந்து விடக் கூடாது.

உங்களுக்குத் தெரிந்த விஷயத்தை சத்தமாக மாணவர்களுக்குச் சொல்லும்போது, அது அவர்களால் கவனிக்கப்படாதபோது உங்களுக்கு மரியாதை குறைவாக எடுத்துக் கொள்கிறீர்கள். மீண்டும் சொல்கிறேன்…அவர்களுக்கு எது வேண்டுமோ, எப்படிச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களோ அதனைச் செய்யவேண்டும்.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்து இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு வேலைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு உங்களை அடிக்கும், திட்டும் மற்றும் மன உளைச்சல் கொடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தால் உங்களின் நிலை என்னவாக இருக்கும்? யோசித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

தான் சொல்ல நினைப்பதை மற்றவர்களுக்குப் புரியும்படியும், ஆர்வமாகக் கேட்கும்படியும் சொல்லத் தெரிவது ஆசிரியருக்குத் தேவையான ஒரு அடிப்படையானத் தகுதியாகும். ஆசிரியராக வெற்றிபெற வாழ்த்துகள்.

கேள்வி – பதில் தொடரும்… 

…………………………………………………………………………………………………………………………………………………

(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)

இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *