மாற்றம் : ஒரு கதை சொல்லட்டுமா? : Episode-4

Share Button

ஒரு கணவனும் மனைவியும் அவர்களிடையே உள்ள சிறு பிரச்சினையை ஆலோசனை (counselling)
மூலமாகத் தீர்த்துக் கொள்ள சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் வந்தார்கள். அவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

“கணவன் முன்பு மாதிரியில்லை, வீட்டிற்கு சீக்கிரம் வருவதில்லை, என்னை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை” என்றும், “முன்பு நன்றாக இருந்தார், இப்பொழுது சரியில்லை” என்று மனைவியின் குற்றச்சாட்டாக இருந்தது. அதேபோல் கணவனும், “எதற்கெடுத்தாலும் என்னோடு வாக்குவாதம் செய்கிறார், எனக்குப் பிடித்தமாதிரி சமையல் செய்வதில்லை, எனக்குப் பிடிக்காத செயல்களை வேண்டுமென்றே செய்கிறார்.

ஆனால், முன்பு இப்படி இல்லை” என்று மனைவியின் மீதும் புகாரை முன்வைத்தார். இறுதியாக இருவரும் கூறிய ஒரே விஷயம் என்னவென்றால், “இவர் முன்புபோல் இல்லை, மாறிவிட்டார்” என்று ஒருவரை ஒருவர் சொல்லிக்கொண்டதுதான்.

உங்களின் நண்பர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள், குடும்ப உறவுகள், அக்கம்பக்கத்தினர் மற்றும் அனைத்துவகையான உறவுமுறைகளிலும் இவ்வகையான (“மாறிவிட்டார்”) ஏதோ ஒரு சூழலில் ஒரு கருத்து உங்கள் மனதினில் எழுந்திருக்கும்.

பொதுவாக காதல் திருமணங்களில் கருத்துவேறுபாடு அதிகம் வருவதற்கு இவ்வகையான மாறிவிட்டார் என்ற கருத்தே பிரதானமாக இருக்கும். இந்த மாற்றம் என்பதனை உற்று நோக்கும்போது ஒன்று புரியும்… இதனை எவ்வாறாகவும் தவிர்க்க இயலாது. நீங்கள் குழந்தையாக இருக்கும்போது உங்களின் அதிகபட்சத் தேவை ஒரு பொம்மையாகவோ, அல்லது இனிப்புத் தின்பண்டமாகவோ இருந்தது.

அதுவே பள்ளிப்பருவத்தில் விளையாட்டு மட்டுமே உங்களை திருப்தி செய்தது. கல்லூரிப் பருவத்தில் காதல் மட்டுமே உங்களின் உயிர் மூச்சாக இருந்தது. பிறகு வேலை, திருமணம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களின் தேவை, மகிழ்ச்சி, திருப்தி மாற்றம் கண்டே வந்துள்ளது.

அதனுடன் உங்களின் மனோபாவமும் மாறிக்கொண்டே வருகிறது. இந்த மாற்றம் எந்த நிமிடம், எந்த நாள் உங்கள் வாழ்க்கையில் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதனை உங்களால் உணரவே முடியாது. அதுவே வாழ்வின் புதிர். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஞானி ஓஷோ அவர்களிடம் ஒருமுறை “ஒரே கேள்விக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பதிலை சொல்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “ஓடுகிற ஆற்றில் ஒருமுறைக்குமேல் கால் வைக்க முடியாது. ஏனெனில் நீங்கள் கால வைக்கும்போது இருந்த தண்ணீர் இப்போது அந்த இடத்தில் இருக்காது. புதிய தண்ணீர்தான் ஓடிக்கொண்டிருக்கும்.” என்று கூறுகிறார். இதுதான் மாற்றம் மற்றும் இயற்கையின் விதி.

இந்த மாற்றத்தை பொதுவாக நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்பதே உண்மை. அதுவே நம் உறவுமுறையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரே கருத்து, ஒரே கொள்கையைக் கொண்டு வாழ்நாள் முழுதும் வாழ்கிறார்கள் என்று நீங்கள் யாரையும் சொல்லமுடியாது. நீங்களே உங்களை பரிசோதியுங்கள். நேற்று நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கியவைகள் இன்று உங்களுக்குத் தேவையாக இருக்கும்.

இன்று தேவைப்படுவது நாளை உங்களால் உதாசீனப்படுத்தப்படலாம். இதுதான் மாற்றம் அல்லது முரண்பாடு. திருமணமே வேண்டாம் என்று பல ஆண்டுகள் இருந்தவர்கள் திடீரென்று திருமணம் செய்துகொள்வர். இந்த நிறுவனத்தை விட்டு கடைசிவரை எங்கும் போகமாட்டேன் என்று சூலுரைத்தவர்கள் வேறு ஒரு சூழ்நிலையில் வேறு ஒரு தொழிலில் இருப்பர்.

அவரை/அவளை சாகும்வரை மறக்கமாட்டேன் என்று கூறிவந்த காதலில் தோல்வியடைந்தவர்கள் சிறிது காலத்தில் அவர்கள் காதலித்தவர்களின் முகத்தையே மறந்து போயிருப்பர். ஒருவர் சிறு வயது முதல் பொக்கிஷமாக சேகரித்தப் பொருட்களை குறிப்பிட்ட வயதில் எவ்வளவுதான் சேகரிப்பது என்று சலித்துக்கொள்வர்.

குடும்பமே கதி என்று இருந்தவர் திடீரென்று ஒரு சந்நியாசி போல் ஊர் ஊராகக் கிளம்பிவிடுவார் பிறந்ததிலிருந்து இருப்பது ஒரே மனிதன்தான். ஆனால், வயது, உடல், பருவம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதுபோல் தனது இயல்பில், மனநிலையில், கருத்துருவாக்கத்திலும் மாற்றம் ஏற்படுவது இயற்கையே என்று உங்களுக்குப் புரியவரும்போது உங்களின் மாற்றத்தை முதலில் ஏற்றுக்கொள்வீர்கள்.

இதேபோல்தானே மற்றவரும் என்று புரியவரும்போது உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மாற்றத்தையும் உணர்வீர்கள். பிறகு “அப்போது அப்படி இருந்தார்… இப்போது மாறிவிட்டார்” என்றக் குற்றச்சாட்டு எழாது. மாறாக யதார்த்தம் புரிந்த மனிதராக மற்றவர்கள் முன்னிலையில் மனிதனாக வாழும் தன்மை எழும்.

அதன்மூலம் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கையாளும் திறன் உங்களில் எழும். அதி முக்கியமாக உங்களின் வாழ்க்கை உங்களுக்குப் புரியும். மாற்றம் தனி மனிதரிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும். வாழ்த்துக்கள்.

கதை தொடரும்… 

………………………………………………………………………………………………………………………………………………………

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *