சிந்தனைத்தெளிவு : ஊக்கமது கைவிடேல் : Episode-5

Share Button

வளர்பிறையும் தேய்பிறையும் நிலவுக்கு உண்டா? இங்கு நமக்கு தேய்பிறை தேவையில்லை. வளர்பிறை என்பது நம்பிக்கை, மெல்ல வெளிச்சம் வந்துவிட்டது, இனி பூரணமாய் வரும் என்கிற நம்பிக்கை. நம் சிந்தனை என்பது எப்பொழுதும் உயர்வாகவே இருக்கவேண்டும், ஏனெனில் நாம் நினைத்தது வேறு காரணங்களினால் கூடாவிட்டாலும், நம் உயர்வான எண்ணத்திற்காகவே பெரியோர்கள் நம்மைப்
பாராட்டுவார்கள். இதை வள்ளுவர்…

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து – குறள் 596

என்கிறார். தன்னம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே இந்த உலகம் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. ஊக்கம் என்பது தன்முனைப்பாக நாம் நமக்குள் நம்மைக் காண்பது, நம்மை உயர்த்திக் கொள்வது. சொல், சிந்தனை மற்றும் செயலில் ஒருவித அறத்துடன் நம்முடன் நம்மைச் சார்ந்தவர்களையும் கூட்டிக்கொண்டு வெற்றியைப் பெறுவது. விஸ்வரூபம் என்பது காட்டப்படுவதற்கில்லை, மாறாக காண்பது.

காண்பது என்கிற நிலையைக் கண்டுவிட்டால், வெளிப்பாடு என்பது அனிச்சைச்செயல். இம்முறை, நாம் ஒரு தேனியிடம் இருந்து கற்கலாம். ஒரு ஈயும், தேனியும் ஒருநாள் சந்தித்துக் கொண்டன. ஈ, தேனியிடம் ”சாப்பிட்டாயா” என்றது. தேனீயோ, “இன்னும் இல்லை, அதற்காகத்தான் பூக்களைத் தேடிப்பறந்து கொண்டிருக்கிறேன்” என்றது.

ஈயோ, “பூமி முழுக்க சுவையான உணவுகள் இரைந்து கிடைக்க, நீ ஏன் பூக்களைத் தேடிக் கொண்டிருக்கிறாய்” எனக் கேட்டது. அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கொட்டிக் கிடக்க, நீயோ அரிதான ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறாய் என்றது.

தேனீ அமைதியாக மறுமொழி தந்தது. “உன் கண்களுக்கு உணவாகவும், இன்பமாகவும் இருக்கும் அனைத்தும் எனக்கு, துர்நாற்றம் பிடித்தவையாகவும், வெறுக்கத்தக்கவையாகவும் தோன்றுகிறது. நான் சேர்த்துவைக்கும் உணவு, ஆண்டுகள் பலவானாலும், அதேசுவையுடன் அப்படியே இருந்து, பலபேர்களுக்குப் பயன்படும்.

ஆனால், உன்னுடைய உணவு, மிகக் குறுகிய காலத்திலேயே அழுகிப்போகும். மேலும், உன்னுடையக் கூட்டம் மட்டுமே அந்தத் துர்நாற்றத்தைத் தேடிப்போகும்” என்றது. ஈ அதற்குமேல் எதுவும் பேசமுடியாமல் சென்றது.

நாமும், தேனியைப் போல் நமது எண்ணங்களை உயர்வாக மற்றும் தனித்தன்மையுடன் தகவமைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவோமாக!

இன்னும் தொடரும்…

 

நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M

தன்முனைப்புப் பேச்சாளர் / மதச் சொற்பொழிவாளர் / தத்துவப் பேச்சாளர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “சிந்தனைத்தெளிவு : ஊக்கமது கைவிடேல் : Episode-5”

  1. Silambarasan says:

    Very good and useful articles. Very nice.
    புதுவரவு டாட்காமில் நல்ல நல்ல கட்டுரைகள் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *