கேள்வி – பதில் : விதி வலியது என்பது உண்மையா? மனிதனால் எதையும் அவர்கள் வாழ்க்கையில் மாற்ற முடியாதா? விதிதான் உண்மையானது என்றால் நாம் செய்ய வேண்டியது எதுவும் இல்லையா? என் மகளை வளர்க்கும் பொறுப்பில் கேட்கிறேன்.

Share Button

கேள்வி : விதி வலியது என்பது உண்மையா? மனிதனால் எதையும் அவர்கள் வாழ்க்கையில் மாற்ற முடியாதா? விதிதான் உண்மையானது என்றால் நாம் செய்ய வேண்டியது எதுவும் இல்லையா? என் மகளை வளர்க்கும் பொறுப்பில் கேட்கிறேன்.

 

 

 

 

 

  • கவிதா, பெற்றோர் – பெங்களூர்.

பதில் : விதிக்கப்பட்டது என்பதன் சுருக்கமே விதி என்பது. இயற்கையில் பனைமரத்தின் விதையிலிருந்து
தென்னை மரம் வளராது. ஒரு செடியின் விதை விதைக்கப்படும்போதே அவ்விதையின் ஆரோக்கியம், வாழ்வு நிலை அனைத்தும் இயற்கையால் விதிக்கப்படுகிறது. விதைக்கப்பட்டிருக்கும் மண்ணின் நிலை, சூரிய ஒளியின் தன்மை, தண்ணீர் மற்றும் உரம் ஆகிய இயற்க்கை சூழலின் நிலையைப் பொறுத்து அவ்விதையின் வாழ்நிலை நிர்ணயிக்கப்படுகிறது.

 

 

 

 

 

  • ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்

அவ்விதையிலிருந்து எது முளைக்க வேண்டும், எவ்வளவு உயரம் வளரவேண்டும், அதன் ஆயுட்காலம் என்பது முதற்கொண்டு அனைத்தும் அவ்விதையில் விதிக்கப்பட்டுள்ளன. இவ்விதி அனைத்து விஷயங்களுக்கும், உயிரினங்களுக்கும் பொருந்தும்.

உங்களின் இந்த உடல் உங்களின் பெற்றோர்களுக்குத்தான் பிறக்கவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ததா? உங்களின் வயிற்று வலியை நீங்கள் நினைத்தாலே குணப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா? உங்கள் மனம் இந்த விஷயத்தைதான் யோசிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நினைவுதான் வரவேண்டும் எனும் ஆளுமை உங்களிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையை நூறு சதவிகிதம் மாற்றும் ஆற்றல் உங்களிடம் உள்ளதா? உங்களின் மரணத்தை முடிவுசெய்யும் திறமை உங்களிடம் இருக்கிறதா? இதுபோன்ற பல கேள்விகளையும் உங்களிடமே கேட்டுப்பாருங்கள். இல்லையென்ற பதிலே கிடைக்கும்.

அப்படியென்றால் மனிதனால் முடிந்தது என்ன? மனிதனால் ஏதேனும் முடியும் என்றால் அது அவனின் மனதில், புரிதலில் மட்டுமே செய்ய முடியும். அப்படியென்றால் நாம் எதுவுமே செய்யவேண்டாமா? விதையின் உள்ளே விதிக்கப்பட்டது இயற்கையாக இருந்தாலும், அதனைச் சுற்றியிருக்கும் தண்ணீரை, உரத்தை, சூரிய ஒளியை தன் வளர்ச்சிக்காக தன்னுள் கிரகித்துக்கொள்வது அவ்விதையின் கடமையாகும்.

அதைப்போல் உங்கள் வாழ்க்கை மூலமாக, மனதின் மூலமாக, புரிதல் மூலமாக இயற்கை தன்னை வெளிப்படுத்தும் இந்த வாழ்க்கைப்பாதையில் உங்களின் கிரகித்துக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்வது உங்களின் கடமையாகும்.

உண்மையில் அது மட்டுமே உங்களால் முடியும். உங்கள் மகளுக்கு கிரகித்துக் கொள்ளும் முயற்சியை ஊக்குவியுங்கள். நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

கேள்வி – பதில் தொடரும்… 

……………………………………………………………………………………………………………………………………………………………………

(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)

இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *