கேள்வி – பதில் : நான் எதற்காகப் படிக்க வேண்டும்? ஏனென்றால் என்னைச் சுற்றியுள்ள பெரியவர்கள் என்னிடம் பேசும்போது படிப்பைப் பற்றி மட்டுமே கேட்கிறார்கள். படிப்பு எனக்கு எதற்கு?
கேள்வி: நான் எதற்காகப் படிக்க வேண்டும்? ஏனென்றால் என்னைச் சுற்றியுள்ள பெரியவர்கள் என்னிடம் பேசும்போது படிப்பைப் பற்றி மட்டுமே கேட்கிறார்கள். படிப்பு எனக்கு எதற்கு?
- சி. சந்தனா, நான்காம் வகுப்பு
பதில்: மூன்று விஷயங்களைக் கேட்டு இருக்கிறாய். முதலில் நீ படிப்பது மொழிகளைத் தெரிந்து
கொள்வதற்காகவோ, கணிதம் மற்றும் இன்னபிறவற்றைத் தெரிந்துகொள்வதற்காகவோ அல்ல. உன் வீட்டில் உள்ள மனிதர்கள் மட்டுமல்லாது வெளியில் உள்ள மனிதர்களிடமும் பழகும் முறை அறிவது, அவர்களின் பழக்கவழக்கம் தெரிந்துகொள்வது, அதன்மூலம் மனிதர்களை அறிவது ஆகியவற்றிற்காகத்தான்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
அதற்கு உறுதுணையாக நடைமுறை வாழ்க்கையில் பயன்படும் பல்வேறு பாடங்களையும் இணைத்துத் தருகிறார்கள். அவ்வளவுதான். இரண்டாவதாக, உன்னிடம் பேசும் பெரியவர்களுக்கு உன் வயதிற்கு, உன் நிலைக்கு இறங்கிப் பேசும் பொறுமை இல்லை. உன் அளவிற்கான உன்னுடைய பேச்சு அவர்களுக்கு சுவாரஸ்யம் தருவதில்லை.
ஆகவே பொதுவாக படிப்பைப் பற்றி பேசுகின்றனர். எங்கு சென்றாலும் அனைவரும் படிப்பைப் பற்றியே பேசுவது உனக்கு எரிச்சலைக் கொடுக்கும் என்பதனை அவர்கள் உணர்வதில்லை. மூன்றாவதாக, நீ உன் அப்பா அம்மாவைப் போல் பெரியவராகும்போது நீயே சுயமாகச் சம்பாதிக்கும் நிலை வரும் அல்லவா? அப்படிச் சம்பாதிப்பதற்கான வேலையைப் பெற்றுத் தருவதற்கு, உனக்குண்டானத் தகுதியைத் தருவதற்கு இப்பொழுது நீ படிக்கும் இந்தப் படிப்பு உதவும்.
தற்போதையப் படிப்பு என்பது முழுக்க முழுக்க உன்னுடைய எதிர்காலத்திற்கான வருமானம் பெற்றுத் தரும் ஒரு கருவியே. நன்றாகப் படி என்பதை விட எதையும் நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சி செய். அதுவே உனக்கு பலம் தரும். மிகச் சிறந்த மனிதனாக வளர வாழ்த்துக்கள்.
கேள்வி – பதில் தொடரும்…
……………………………………………………………………………………………………………………………………………………………………….
“எங்க ஏரியா… உள்ள வாங்க”
(இது குழந்தைகளுடன் ஓர் உரையாடல்)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ, குழந்தைகளாகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply