சிந்தனைச் சிறகு : ஊக்கமது கைவிடேல் : Episode-3
முதியவர்களும் முற்றங்களும் இல்லாத வீடுகளுக்குச் சிட்டுக்குருவிகள் வருவதில்லை. இலக்கும் திட்டமிடுதலும் இல்லாதவனிடத்தில் ஊக்கமும் வருவதேயில்லை. இவ்விரண்டும் இருப்பவனிடத்தில் ஆக்கமானது/செயலானது முகவரி தேடிச்சென்று அடையும் என வள்ளுவர்….
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை-குறள் 594
என மிகவும் உறுதியாகச் சொல்கிறார். நாம் கேட்டு மறந்த அல்லது தவறாகக் கேட்ட சில கதைகளுள் பாட்டி வடைசுட்ட கதையும் ஒன்று. அக்கதையை இன்று சரியாகப் பார்ப்போம். ஒரு ஊருல ஒரு காகம் இருந்ததாம். ஒருநாள் ரொம்பப் பசியாக இருந்த பொழுது, ஒரு பாட்டியைக் கண்ட தாம். பாட்டியிடம் தனக்கு பசிக்கிறது… வடை வேண்டும் என்றதும் (அறிமுகம்), பாட்டி காய்ந்த விறகு/சுள்ளி வேண்டும் எனக் கேட்கிறாள், அந்த காகம் பறந்து சென்று தேவையான காய்ந்த விறகுகளைக்/சுள்ளிகளைக் கொண்டு வந்து கொடுக்கிறது (உழைப்பு).
பாட்டியும் வடை சுடுகிறாள். பாட்டி வடை சுடும் வேலையில் மூழ்கியதால் காகத்தை மறந்துவிட்டாள் (முதலாளித்துவம்). காகம் பாட்டியிடம், முதலில் நான் கேட்டது பிட்சை.. இப்போது கேட்பது கூலி, எனக்கு கூலி கொடு என்றது (உரிமை). பாட்டி ஒரு வடையை காகத்திடம் கொடுக்க, அதுவும் பறந்து சென்று மரத்தின்மேல் அமர்ந்து கொள்கிறது. ஏமாற்றுபவனாக ஒரு நரி வருகிறது. காகத்தின் உழைப்பை ஏமாற்றுவதற்காக, ”ஏய் காக்கையே, நீ மிகவும் அழகாக இருக்கிறாய், நீ மிகவும் அழகாக்கப் பாடுவாய், ஒரு பாட்டு பாடேன்” என்கிறது, காக்கையும் அவ்வழகு வார்த்தையில் மயங்கியதால் வடை கீழே விழுந்தது (தொழிலாளர் பலவீனம்).
நரி அந்த வடையைக் கவ்வியவுடன், காக்கை விழிப்புணர்வு கொண்டு, கரையத் தொடங்குகிறது, மேலும் பல காக்கைகள் கூடுகின்றன (தொழிலாளர் ஒற்றுமை). இறுதியில், அந்தக் காட்டில், தன் உழைப்பை இழந்த ஒரு காக்கைக்கு மட்டும் உணவு கிடைக்கவில்லை, அத்துனை காகங்களுக்கும் அந்தநரி உணவாகிப் போனது. இந்த கதைதான் நீதிக்கதையாக இருக்கமுடியும். நாம் எல்லோர்க்கும் ஒரு தவறான கதை நீதிக்கதை எனச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, ஒரு கதையினூடே, சுயஅறிமுகம், உண்மை, உழைப்பு, உரிமை, ஏமாறுதல், விழித்தல், ஒற்றுமை என வாழ்க்கைக்குத் தேவையான பல கருத்துக்கள் அறத்தின் ஊடகம் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
இதுவே ஊக்கச் சிந்தனைகளை உள்ளத்தில் விதைப்பதற்கு ஆகச் சிறந்த வழி. அறச் சிந்தனைகளே அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படை என்பதைப் புரிதலே ஊக்கத்தின் முதல்படி. அறத்தினை உட்கொள்ளாமல் ஊக்கம் முதலிய இன்னபிற கருத்துக்களைப் புரிந்துகொள்ள விழைதல், காற்றில் ஓவியம் வரைதலுக்கு ஒப்பாகும். ஆதலால், அறத்தினையும் ஊக்கத்தினையும் அதன் அடிப்படையில் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
இன்னும் தொடரும்…
நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M
(Founder Of PuraAbhiNavam Trust)
Leave a Reply