08.12.2018 அன்று 80 அகவை நிறைவு செய்த விஐடி வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன் அவர்களின் முத்துவிழா 23.12.2018 ஞாயிறன்று வேலூரில்  சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

Share Button
இலக்கு நோக்கிப் பயணித்த ஏவுகணையாகத் தமிழக வரலாற்றில் ஒளிமிக்க தடம் பதித்தவர் வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன் அவர்கள். நாடாளுமன்றத்தைத் தன் நாவாளுமன்றமாக்கியவர். தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தமிழற்பணி ஆற்றியவர்.

தமிழக அரசின் உணவுத்துறை அமைச்சராக இலட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் அடுப்பு அமாவாசையை நீக்கியவர். வேலூர் தமிழ்ச் சங்கம் நிறுவி, தமிழ் இலக்கியப் பறவைகளுக்கு கூடு தந்தவர். வேலூர் மாவட்ட தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பை முதன்முதலாக கட்டியவர். வேலூர் தமிழ்ச் சங்க அறக்கட்டளைத் தலைவராகப் பாலாறாம் பனஞ்சுவடியில் உயிர்மெய் எழுத்தாகப் பதிந்தவர்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையை நோய்வாய்ப் படாமல் காப்பாற்றியவர். விஐடி தொழில்நுட்பக் கல்லூரியை வேலூரில் தொடங்கித் துலங்க வைத்தவர். விஐடி பல்கலைக் கழக வேந்தராகக் கல்வி உலகில் மாற்றமும் ஏற்றமும் தந்து, வெறும் புள்ளிகளாய் வந்த மாணவர்களை விண்மீனாக்கிச் சுடர வைத்துக்
கொண்டிருப்பவர்.
சென்னை, போபால், அமராவதி ஆகிய இடங்களில் விஐடி பல்கலைக் கழகத்தை விரிவுபடுத்தி வருபவர்.
வெளிநாட்டு மாணவர்கள் விருப்பத் தேர்வாக விஐடி பல்கலைக் கழகம் நோக்கி உலகத்தின் முகம் திரும்பச் செய்தவர். அனைவருக்கும் உயர்கல்வித் திட்ட அறக்கட்டளைத் தலைவராக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் குடும்பப் பிள்ளைகட்கு நிதிக்கரம் நீட்டி, இளம்பிறைகளைப் பௌர்னமிகள் ஆக்கி வருபவர்.
இந்தியப் பொருளியல் சங்கத்தின் தலைவராக, ஏழாயிரம் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வேலூர் ஊரிசுக் கல்லூரி, சென்னை லயோலாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவராகப் பாராட்டும் பணிகளை ஆற்றி வருபவர்.
ஒரே குடைக்கீழ் உலகத் தமிழ் மற்றும் தமிழர் அமைப்புகளை ஒன்றிணைத்து “தமிழியக்கம்” எனும் உலகளாவிய தமிழ் அமைப்பினை நிறுவி அரிதினும் அரிதாய் ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களை ஓரணியில் இடபெறச் செய்து, ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரையில் பரவியிருக்கும் அயலகத் தமிழர்களையும், இந்தியாவில் பிறமாநிலத் தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கே சேர்த்து, தமிழியக்கம் தொடங்கிய சாதனையாளர்.
08.12.2018 அன்று 80 அகவை நிறைவு செய்த வேந்தரின் முத்துவிழா 23.12.2018 ஞாயிறன்று வேலூரில்
சிறப்பாக நடைபெறவிருக்கிறது. தமிழறிஞர்கள், அமைச்சர்கள், மேனாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள்,
திரைத்துறையினர், வணிகர்கள், சேவைச் சங்கங்களின் செயல் வீரர்கள், தமிழ் மற்றும் தமிழர் நலம் நாடும்
அமைப்புகளின் பொறுப்பாளர்கள், மத்திய மாநில அரசுத்துறை இந்நாள், மேனாள் அதிகாரிகள் என
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் விழாவாக வடிவமைக்கப்பட்டுள்ள வேந்தர் முத்துவிழா!
சாதனை வரலாற்று வித்துவிழா! வாழ்த்துப் பெறவும் அன்பு வாழ்த்து மலர்கள் அள்ளித்தரவும்.
அன்புடன் அழைக்கின்றோம்.
மு. சுகுமார்
செயலாளர்,
வேந்தர் 80 முத்துவிழாக் குழு
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.