நெகிழிக்குப்பைகளைக் களைந்தெறிவோம்!
************************************
நிலப்பரப்பின் சூழலில் மனிதவள மேம்பாடு – நாம்
உலவுகின்ற காற்றினில் சுவாசத்தின் வெளிப்பாடு
அணிகின்ற உடையாலே உள்ளத்தில் கூப்பாடு – நம்
பிணியற்ற வாழ்வுதனில் மிளிரும் மெய்ப்பாடு
பருத்தி உடையணியும் மனமெங்கும் மகிழ்வு – இனி
பன்னாட்டு மோகமதில் மதியிழந்தால் தாழ்வு
தாய்மொழிக் கல்வியதில் கனியும் எதிர்காலம் – நம்
தரணியிலே தழைக்கும் மனிதம் முக்காலம்
நீர்வழி ஆதாரம் வழிகாணும் விவசாயம் – இனி
வேர்விடும் தன்னிறைவில் எப்போதும் முப்போகம்
நதிநீர் இணைப்பினிலே தீர்ந்துவிடும் பஞ்சம் – நம்
விதிமாற்ற முன்னெடுப்போம் மகிழவே மிஞ்சும்
நிலமடந்தை தலைநிமிர்ந்து நடந்திடவே நாளும் – இனி
நெகிழிக்குப்பைகளைக் களைந்தெறிவோம் கேளும்
தூயமிகு வீதிகளில் துன்பமின்றி வாழ்ந்திடுவோம் – நல்ல
நேயமிகு சொல்லெடுத்துப் பகன்றிடுவோம் என்றும்
……………………………
கா.ந.கல்யாணசுந்தரம்