புதிய தொடர் ஓர் அறிமுகம் : நான் மனம் பேசுகிறேன் : Episode-1
ஆதி மனிதனிலிருந்து நாகரிக மனிதன் வரை எண்ணற்ற விஷயங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து
இருக்கின்றன. உருவம், ஆடை, இருப்பிடம், உறவுமுறைகள், சுயதேவைகள், திட்டமிடல், சமூகமுறை,
போர்முறை, அறிவியல் மற்றும் எண்ணற்றவைகள் மாற்றம் கண்டு வந்துள்ளன.
மாற்றத்தை மேலோட்டமாக வைத்துக்கொண்டு தன் கட்டமைப்பை அப்படியே பாதுகாத்து இன்றளவும்
ஒவ்வருவருக்கும் மிகப்பெரிய சவாலாக தன்னை இலைமறைவில் வைத்திருக்கும் ஒன்றுதான் மனம்.
மனம் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் அறிவியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், ஆன்மிகம் சார்ந்தும் பல
நூற்றாண்டுகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் இதனைச் சற்றே புரிந்துகொள்வதும்,
புரிந்தகொள்ள முயற்சிப்பதும் கடினமாகத்தான் இருக்கிறது.
“வரவர மனிதர்கள் தன்னை விட்டு வெளி உலகை மட்டுமே பார்க்கிறார்கள்” என்ற ஆதங்கம் என்னை
பலமுறை உலுக்கியிருக்கிறது. யோசித்துப் பார்க்கும்போது யதார்த்தமாக புரியவைக்கும் முயற்சி
மிகக்குறைவாகவும், புரிந்துகொள்ள முயற்சிக்காமல் “நடைமுறையில் சாத்தியமில்லை” எனும் ஒற்றை
வார்த்தையில் மறுதலிப்பது மிக அதிகமாகவும் இருக்கிறது.
இதுவரை யாரும் சொல்லாததை இங்கு பதியப்போவதில்லை. இன்றையச் சூழ்நிலையில் யாரும்
மற்றவருடையப் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. மிகச் சிறந்த பேச்சாளர்களின் கருத்துகள் கூட “சூப்பரா
பேசினாரு இல்லப்பா” எனும் ஒற்றைக்கருத்தில் முடிக்கப்பட்டு விடுகிறது. நல்லாயிருக்கு, நல்லாயில்லை எனும்
கருத்தைத் தாண்டி எனக்கு இது எவ்விதம் பயன்படும் என்று உற்றுநோக்கும் தன்மை மிகக்குறைவாகவே
இருக்கிறது. இதற்கு வாழும் சூழ்நிலை, உடல் மற்றும் மனநிலை, தன தேவைகளின் போக்கு ஆகியவைகள்
முக்கியப் பங்காற்றுகின்றன.
இது அனைத்திற்கும் மேலாக, உங்களுக்கான வழிகாட்டும் நண்பன், குரு, ஆசான், அனுபவம் உங்களை
மிஞ்சி வேறு யாருமில்லை. இத்தொடரில் உங்கள் மனம் உங்களுக்குச் சொல்லவருவதைக் காண்பீர்கள். “ஆமாம்,
இதைத்தான் நான் யோசிச்சேன்…இத எப்படி கையாளறது” எனும் தொடர் ஆர்வம் உங்களில் மேலோங்குவதைக்
காண்பீர்கள்.
இத்தொடர் சிக்கலான மனக்கட்டமைப்பை விளக்கும் ஆராய்ச்சிக்கட்டுரை அல்ல. இக்காலகட்டத்தில்
உள்ள உங்கள் மனதின் கேள்விகளுக்கான, குழப்பங்களுக்கான ஒரு அனுபவ உதவி. என் அனுபவம் உங்களுக்கு
எப்படி உதவும்?
சராசரி ஆயுட்கால அறுபது வருடத்தில் அனைத்தையும் சுய அனுபவம் மூலம் புரிந்துகொள்ளுதல்
சாத்தியமன்று. மற்றவர்களை கவனித்தல் மூலம் தன்னைப் பார்க்கும் நிலை வளரும்.
“போனை பேண்ட் பின் பாக்கெட்ல வைச்ருந்தேன். உட்காரும்போது கவனிக்கல…ஸ்க்ரீன் உடைச்சு
போச்சுப்பா” – யாரோ சொல்லும்போது தன் போனை பேண்ட் பாக்கெட்டில் வைக்கக்கூடாது என்பது புரியும்.
சாலையில் யாரோ ஒருவர் அக்கம் பக்கம் பார்க்காது எச்சில் துப்பிவிட்டு மற்றவரிடம் திட்டு
வாங்கும்போது, தான் இதுபோல் செய்துவிட்டு அவமானப்படக்கூடாது எனும் எண்ணம் துளிர்விடும்.
“வேலை செய்யற இடத்துல ஒரே பிரச்சினை…தொட்டதுக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிக்கறான்: ஏன்,
எதனால் என்று உங்கள் மனதைக் கேட்க ஆயிரம் காரணங்கள் விளக்கப்படும். இதுபோன்று உங்கள் மனதுடன்
பேசுவதற்கு இத்தொடர் உதவும்.
“எனக்கு என்னுடன் பேசுவதற்குத் தெரியுமே…நீங்கள் எந்த வகையில் எனக்கு உதவிட முடியும்?”
மனம் விசித்திரமானது. கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் தந்து ஒன்றைப் பலவாறாகப்
பெருக்குவதில் மனம் தந்திரமானது. அது தனக்குள் முரண்பட்டது. அந்த முரண்பாட்டை நேருக்கு நேர் சந்திப்பது
மிகப்பெரிய சவாலாகும். அந்த முரண்பாட்டை நெறிப்படுத்தி உங்களுக்கு அனுப்பும் ஒரு நெறியாளர் பணி
மட்டுமே என்னுடையது.
மனதிற்கான இலக்கணம் பலவகைகளாகக் கொடுக்கப்பட்டாலும், பொதுவாக அதனை ஒரு சிந்தனைக்
குவியல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பழையது, தற்போதையது, நினைவில் மறைந்துபோனது
என்ற பல நிலைகள் அதற்கு உண்டு.
“டெய்லி காலைல வாக்கிங் போய் பழகிடிச்சு, என்னைக்காவது ஒருநாள் போகலைனா என்னமோ மாதிரி
ஆயுடுது”.
“நைட் எப்போவும் டிபன் சாப்பிட்டே பழகிப்போச்சு…வேற சாப்பிட்டா ஒத்துக்க மாட்டேங்குது”
“என்னமோ தெரியல காரணமே இல்லாம ஒரு மாதிரியா இருக்கு”.
“ நான் ஏன் அந்த மாதிரி பேசினேன்னு தெரியல, இப்போ யோசிச்சா கஷ்டமா இருக்கு.”
மனம் பழக்கப்படுத்தப்பட வேண்டும். அது தானாகவே தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதனால்
நீங்கள் பல சூழ்நிலைகளில் சங்கடங்களைச் சந்திக்கவேண்டி வரும். நீங்கள் அதனைப் பழக்கப்படுத்தினால்
உங்கள் சவுகரியத்திற்கு அது பயன்படும்.
நீங்கள் இதுவரைச் சந்தித்த அனுபவங்கள், மனிதர்கள் மற்றும் அவர்களின் குணநலன்கள், சூழ்நிலைகள்,
உணர்வுகள் ஆகியவற்றை சேகரித்துக் கொள்ளும் மனம் அதுவாகவே ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து சேகரித்துக்
கொண்டவைகளையே மீண்டும் ஒரு கருத்துப் பட்டத்தோடு உங்களுக்கு வழங்கும். அதையே நீங்கள்
பிரதிபலிக்கிறீர்கள்.
உங்கள் மனம் ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு உண்மையான கருவி. உங்கள் மேலதிகாரியோ அல்லது
உடன் பணிபுரிபவர்களோ உங்களிடம் கோபத்தைக் காட்ட, உங்கள் உணர்வை வெளிப்படுத்த முடியாத சூழலில்
உங்கள் மனதின் நிலை எவ்வாறு இருக்கும்?
“அவன் ஒழுக்கமா? அவன் இவ்வளவு கொள்ளையடிக்கிறான், பொம்பள பின்னாடி சுத்தறான், என்ன
கேட்க வந்துட்டான்… தன் தவறை மறைக்க என்கிட்ட பாயுறான்…என்கிட்ட என்னைக்கு வாங்கிக் கட்டிக்கப்
போறான்னு தெரில”
உங்கள் மனம் இதுவரை சேகரித்த தகவல் மற்றும் உணர்வுகளை வெளிபடுத்தும்.. இந்தக் கோபம்,
புலம்பல் அடித்தளமாக மாறி சம்பந்தப்பட்ட மனிதரை அடியோடு வெறுக்கும் மனோபாவம்
உங்களையறியாமலேயே உருவாகிவிடும்.
இதே கோபத்தை உங்களையும் பாதிக்காது அந்த மனிதரையும் வெறுக்காது உங்கள் மனதை
பழக்கப்படுத்துவதன் மூலம் சுலபமாக கையாளமுடியும். இதைபோன்று அனைத்து உணர்வுகளையும்,
மனிதர்களையும், சூழ்நிலைகளையும், பழக்கவழக்கங்களையும் உங்கள் மனதை வைத்தே கையாளமுடியும்.
“அவங்க இப்படி செய்வாங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்கல…அத நினைச்சு நினைச்சு ஒரே
தலைவலியா இருக்கு”
நீங்கள் மறக்க நினைக்கும் விஷயத்தை மனம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி உங்களை
நிலைகுலையச் செய்யும்.
“இவங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்…சரியாய் ஞாபகம் வரல”
உங்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் விஷயங்கள் தேவைப்படும் நேரத்தில் நினைவிற்கு வராமல்
உங்களைத் திணறடிக்கும்.
சுற்றுலா செல்வதற்குப் பல நாட்கள் திட்டம் போட்டு, ஒருவழியாக அந்த இடத்திற்குச் சென்றால் அங்கு
சென்று மனம் வீட்டையும் தொழிலையும் பற்றி யோசித்து உங்கள் சுற்றுலா அனுபவத்தைத் தடுக்கும்.
“நான் ஏன் இப்படி பண்ணினேன்னு தெரியல…எனக்கே என்னை நினனச்சு வெக்கமாயிருக்கு”.
உங்கள் செயலை உங்கள் மனமே கண்டிக்கும். ஏனென்று புரியாமல் பலநாட்களுக்கு இதன் வீரியம்
உங்களை ஆக்கிரமிக்கும்.
“நான் மனம் பேசுகிறேன்” எனும் இந்தக் கட்டுரை தொடர் மிகப்பெரிய உற்றுநோக்கலின் பகிர்தலாகும்.
உணர்வுகளை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி புரியவைப்பது மிகப்பெரிய சவாலாகும். இருப்பினும்
படிப்பவர்களின் தேவைகளைப் பொறுத்து அதனை உள்வாங்கும் விஷயம் எளிதாக நடக்கும்.
இதனை உள்வாங்குவதும் உங்கள் மனதின் மூலமாகவே நடைபெறும். இதுதான் மனதின் இயல்பு.
ஆனால் உங்கள் மனம் எஜமானனாக இல்லாமல் நீங்கள் எஜமானனாக இருப்பீர்கள்.
உங்களிடம் உள்ள கருவிகளை வைத்துதான் வளர்ச்சியை நோக்கிச் செல்லமுடியும். உங்களிடம் உள்ள
மிகப்பெரிய ஒரே கருவி உங்கள் மனம். அதனை வைத்து உங்கள் உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம், சமூகத்தில்
உங்கள் பார்வை, உறவுகளைக் கையாளும் பாங்கு, சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை
கைகொள்ளமுடியும்.
கண்ணுக்குத் தெரியாத, அடையாளம் காணமுடியாத, இன்னதென்று இனம் பிரிக்கமுடியாத, பார்வை
மற்றும் உணர்வுக்கு அப்பாற்பட்டு உங்களின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் உங்களையே அறியாமல் இயக்கும்
இந்த மனம் ஒரு போர்க்களம். எப்படி? அடுத்த இதழில் “நான் மனம் பேசுகிறேன்”
……………………….
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்